ஜெகதீஷ் ஷெட்டரை தோற்கடிப்போம்: பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சூளுரை
- ஜெகதீஷ் ஷெட்டர் தனது சுயநலத்திற்காக கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு காங்கிரசுக்கு சென்றுவிட்டார்.
- சட்டசபை தேர்தல் களத்தில் 72 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம்.
பெங்களூரு :
உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் ஜெகதீஷ் ஷெட்டர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார்.
இந்த நிலையில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதா லிங்காயத் சமூக மூத்த தலைவர்களுக்கு டிக்கெட் நிராகரித்து அதன் மூலம் அந்த சமூகத்தை அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் சொல்கிறது. உப்பள்ளி-தாா்வார் மத்திய தொகுதி பா.ஜனதாவின் பாரம்பரியமான வலுவான தொகுதி ஆகும். பா.ஜனதாவுக்கு அது பாதுகாப்பான தொகுதி. அது தொடர்ந்து அவ்வாறே இருக்கும். அதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜெகதீஷ் ஷெட்டரின் தோல்வியை தொண்டர்கள் உறுதி செய்வார்கள்.
வலுவான பா.ஜனதாவால் தான் ஜெகதீஷ் ஷெட்டர் அந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார். அவர் ஒன்றும் மக்கள் செல்வாக்கு படைத்த தலைவர் கிடையாது. அவர் பா.ஜனதாவை ஏமாற்றிவிட்டு காங்கிரசுக்கு சென்றுள்ளார். இதனால் பா.ஜனதா தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் மகேஷ் தெங்கினிகாயும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் தான்.
பா.ஜனதாவுக்கு லிங்காயத் சமூகத்தின் பெரிய தலைவர் எடியூரப்பா மற்றும் மந்திரி சோமண்ணா, பசனகவுடா பட்டீல் யத்னால் உள்ளிட்டோரின் ஆதரவு உள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் அதே சமூகத்தை சேர்ந்தவர் தான். காங்கிரசில் சேர்ந்த லட்சுமண் சவதியால் கடந்த 2018-ம் ஆண்டு தனது தொகுதியான அதானியில் வெற்றி பெற முடியவில்லை.
ஆனால் அவருக்கு எம்.எல்.சி. பதவி வழங்கி துணை முதல்-மந்திரி ஆக்கினோம். ஜெகதீஷ் ஷெட்டருக்கும் அனைத்து மரியாதையும் வழங்கினோம். ஆனால் அவர் தனது சுயநலத்திற்காக கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு காங்கிரசுக்கு சென்றுவிட்டார். சட்டசபை தேர்தல் களத்தில் 72 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம். இதனால் பா.ஜனதாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.
இந்த முறை மைசூரு மண்டலத்திலும் பா.ஜனதா வெற்றி பெறும். அந்த மண்டலத்தில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், சி.டி.ரவி எம்.எல்.ஏ. போன்றோர் போட்டியிடுவதால், அது எங்களுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். பல்வேறு வளர்ச்சி குறியீட்டில் கர்நாடகம் முன்னிலையில் உள்ளது. அதனால் இந்த தேர்தலில் பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்கும். 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை நாங்கள் அடைவோம்.
இவ்வாறு அருண்சிங் கூறினார்.