8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி: 'ரீல்ஸ்' வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி
- குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.
- போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார்.
கொல்கத்தா :
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள் குழந்தையின்றி நடமாடுவது குறித்தும், ஜாலியாக பல இடங்களுக்கு சுற்றித்திரிவது குறித்தும் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து போலீசார், இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.
ஒரு மாதத்திற்கு முன்பாக அந்த தம்பதி தங்களது 8 மாத ஆண் குழந்தையை ஒருவரிடம் விற்றுள்ளனர். அதில் கிடைத்த பணத்தில் ஐபோன்-14 என்ற நவீன மாதிரி போனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று உல்லாசமாக வாழ்ந்துள்ளனர்.
அத்துடன் புதிதாக வாங்கிய செல்போனில் வீடியோ காட்சிகளை பதிவு செய்து ரீல்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.
"இதுகுறித்து எங்களுக்கு கடந்த 24-ந் தேதிதான் புகார் வந்தது. குழந்தையை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தையை எவ்வளவு பணத்திற்கு விற்றார்கள், யாரிடம் விற்றார்கள் என்பது பற்றிய விவரங்கள், அந்த பெண்ணின் கணவரை பிடித்தால்தான் தெரியவரும். இது தொடர்பாக அவளது கணவரையும், குழந்தையை வாங்கியவர்களையும் தேடி வருகிறோம்" என்று போலீசார் தெரிவித்தனர்.