இந்தியா (National)

விவசாயிகள் எதிர்ப்பை என்ன செய்தது பாஜக?.. அரியானா வெற்றிக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணமா? முழு பின்னணி

Published On 2024-10-09 08:59 GMT   |   Update On 2024-10-09 10:46 GMT
  • விவசாயிகள் பிரச்சனை, அக்னிவீர் திட்ட எதிர்ப்பு உள்ளிட்டவை அரியானா தேர்தலில் பெரிய தாக்கம் செலுத்தவில்லை
  • மக்களவைத் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது.

பாஜக தோல்வி 

விவசாயிகள் பிரச்சனை, அக்னிவீர் திட்ட எதிர்ப்பு உள்ளிட்டவை அரியானாவில் நடந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக 90 க்கு 48 தொகுதிகளைக் கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது. இதற்கு பலதரப்பட்ட காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதில் முக்கியமானது இந்த தேர்தலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கள செயல்பாடு. கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு அரியானாவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. மொத்தம் உள்ள 10 மக்களைவைத் தொகுதிகளில் 5 இடங்களில் பாஜகவும், 5 இடங்களில் இந்தியா கூட்டணியும் வென்றது. முன்னதாக 2019 தேர்தலில் 10 இடங்களிலும் பாஜக வென்ற இந்நிலையில் 2024 தேர்தல் பாஜகவுக்கு சறுக்களாக பார்க்கப்பட்டது.

 

 

 உதவி நாடி சென்ற இடம் 

இதில் சுதாரித்த பாஜக தங்கள் கொள்கை கூட்டாளியான ஆர்எஸ்எஸ் அமைப்பை நாடியது. அதன்படி அரியானாவில் பாஜகவுக்கு உள்ள மக்கள் ஆதரவு குறித்து ஆர்எஸ்எஸ் எடுத்த சர்வே, முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாருக்கு தலைமைக்கு ஆதரவு குறைந்ததை சுட்டிக்காட்டியது.

இதனால் கட்டார் நீக்கப்பட்டு கடந்த மார்ச்சில் நயாப் சிங் சைனி முதல்வர் ஆக்கப்பட்டார். இது, அடுத்த தேர்தலை மனதில் வைத்து பாஜக எடுத்துவைத்த முதல் அடி. அதன்பின் விவசாயப் பெருநிலமாக விளங்கும் அரியானாவில் கிராமங்களில் கட்சிக்கான ஆதரவை மீட்டெடுக்கும் பொறுப்பை ஆர்எஸ்எஎஸ் இடம் பாஜக ஒப்படைத்தது.

களத்தில் ஆர்எஸ்எஸ்

ஜூன் 5 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மத்தியில் பதவியேற்பு ஆரவாரங்கள் முடிந்தபின்னர் சரியாக ஒரு மாதம் கழித்து ஜூலை 29 ஆம் தேதி புது தில்லியில் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் அருண் குமார், அரியானா பாஜக தலைவர் மோகன்லால் பர்தோலி, அப்போதைய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் அடங்கிய முக்கிய கூட்டம் ஒன்று நடந்தது.

இதில் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன. கிராம மக்களின் நம்பிக்கையை மீளப்பெறுவதே இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு. அதன்படி, உள்ளூர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களை மக்களிடையே நிறுவுவது என வேலையைத் தொடங்கியது ஆர்எஸ்எஸ். செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஊரக வாக்காளரைக் கவரும் திட்டம் தொடங்கப்பட்டது.

 

கிராமங்கள் -  கூட்டங்கள் 

இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தது 150 ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். கிராமப்புர சமூகங்களிடம் அதிகரித்து இருந்த பாஜவுக்கு எதிரான மனநிலையை மாற்றும் பணியில் அந்த குழு ஈடுபட்டது. மக்கள் முன் தோன்றி கைகட்டி ஆதரவு சேகரிப்பதை விட சிறந்த அரசியல் திட்டம் எதுவும் இல்லை என்று அரசியல் விமர்சகர் ராஜாத் சேத்தி ஆர்எஸ்எஸ்-ன் இந்த ஊரக மக்களை கவரும் திட்டம் குறித்து பேசியிருந்தார். 

செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து சுமார் 16,000 ஆர்எஸ்எஸ் சந்திப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் அரியானாவில் நடத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக இந்த சந்திப்புகள், நிகழ்ச்சிகளுக்கு மக்கள் திரட்டப்பட்டனர். இங்கு பாஜக விரோத போக்கு காரணமாக இந்த ஆள் திரட்டுதலில் பாஜகவினரை விட ஆர்எஸ்எஸ் காரர்களே முக்கிய சக்தியாகச் செயல்பட்டனர்.

 

முகம் 

அதிக வாக்கு வங்கி உள்ள உள்ளூர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதல் கைகொடுத்தது. புதிதாக ஆதரவு  திரட்டுவதை விட விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்டவற்றால் மனக்கசப்பில் பாஜக ஆதரவிலிருந்து விலகியவர்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்கும் விதமாகச் செயல்பட்டது ஆர்எஸ்எஸ். புதிதாக வந்த முதல்வர் நயாப் சிங்சையினியின் முகத்தை கிராமங்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணி நடந்தது. குறிப்பாக அவரின் சொந்த தொகுதியான லாட்வாவில் அவருக்கு எதிராக இருந்த மனநிலையை மாற்ற அதிக கவனம் செலுத்தப்பட்டது.

கிராமந்தோறும் பாஜக மீது அதிருப்தி தெரிவித்திருந்த சாதித் தலைவர்கள் , பஞ்சாயத்துத் தலைவர்களை முதல்வர் சைனி நேரடியாகச் சென்று சந்தித்தார் . அதிகம் உள்ள ஜாத் சமூகத்தினர், தலித்துகளின் வாக்கு வங்கிக்கு முக்கிய கவனம் தரப்பட்டது.

நம்பிக்கை 

பாஜக அரசு மற்றும் மக்களுக்கிடையே இருந்த இடைவெளியை ஆர்எஸ்எஸ் நிரப்பியது. மடல்கள் தோறும், பஞ்சாயத்துகள் தோறும் பொது சவுபல் [chaupals] எனப்படும் அமைப்புகள் தோறும் ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் வாக்கு வங்கியை உறுதி செய்தனர்.

முன்னதாக கூறியபடி செப்டம்பர் 1 முதல் 9 வரை ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் குறைந்தது 90 கூட்டங்கள் நடத்தப்பட்டன. கிராமப்புற பகுதிகளில் 200 வரை அது அதிகரித்தது. பாஜகவின் நிர்வாகம் மற்றும் தலைமை மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதில் ஆர்எஸ்எஸ் உயர் தலைவர்கள் தீவிரம் காட்டினர்.

 

முதல் வெற்றி 

மக்களவைத் தேர்தலில் அமைதியாக இருந்த ஆர்எஸ்எஸ் அதில் பாஜக வாங்கிய அடியைப் பார்த்த பின் இந்த சட்டமன்றத் தேர்தலில் களத்தில் இறங்கியதால் கிடைத்த பலன், மோடி மூன்றாவது முறையாகப் பிரதமரான பிறகு தேசிய அளவில் பாஜக ஜெயிக்கும் முதல் தேர்தல் இதுவே என்பதாகும்.

 

கடவுள் 

பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் க்கும் சமீப காலமாக உரசல்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. மோடி தன்னை கடவுளின் நேரடி அவதாரமாக  மட்டுமே முன்னிலைப் படுத்தியது ஆர்எஸ்எஸ் தலைவர்களைக் கோபப்படுத்தியிருந்தாலும் பாஜகவின் தாய் இயக்கமாக அதன் அதிகாரத்தை உறுதி செய்யவேண்டிய பொறுப்பையும் ஆர்எஸ்எஸ் உணர்ந்தே உள்ளது.

ஒருவரை முன்னிலைப் படுத்துவதன் மூலமாக அன்றி சத்தமில்லாமல் வேர்களில் கிராமங்களில் வீடுதோறும், சமூகங்கள் தோறும் கொள்கைகளைப் பரப்புவதன் மூலமே ஆதரவை அறுவடை செய்து அதன்மூலம் அதிகாரத்தை நிலைநிறுத்த முடியும் என்பதில் ஆர்எஸ்எஸ் உறுதியாக இருக்கிறது என்பதை இந்த தேர்தல் வெற்றி காட்டுகிறது.

Tags:    

Similar News