அம்பானியின் கல்யாண செலவு யார் பணத்தில் நடந்தது?: பிரதமரை தாக்கிய ராகுல் காந்தி
- அம்பானி திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்தார். அது யாருடைய பணம்?
- இந்தியாவில் இன்று அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு எல்லாம் உண்டு என்றார்.
சண்டிகர்:
அரியானா சட்டசபைத் தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சோனிபட் பகுதியில் கோஹனா என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மகாபாரதத்தில் அபிமன்யு குருக்ஷேத்திரத்தில் மாட்டிக்கொண்டதைப் போல, கடைக்காரர்களை ஒரு சக்கர வியூகத்தில் சிக்க வைத்துவிட்டார் நரேந்திர மோடி.
அவர்கள் எப்படி மாட்டிக்கொண்டார்கள்? பணமதிப்பிழப்பு நீக்கம், ஜிஎஸ்டி, 2-3 கோடீஸ்வரர்களுக்கு வங்கிகளின் பணம் அனைத்தும் வழங்கப்பட்டது. வங்கிகளில் கடன் வாங்கச் சொன்னால் வங்கிகள் கடன் தராது என சொல்வார்கள்.
இந்தியாவில் இன்று அதானி மற்றும் அம்பானி மட்டுமே கடன் பெற முடியும். அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு எல்லாம் உண்டு.
அக்னிவீர் யோஜனா என்றால் என்ன? இந்தத் திட்டத்திற்கு ஒரே ஒரு நோக்கம்தான் - ராணுவ வீரர்களுக்குப் போகும் பென்ஷன், கேன்டீன், இழப்பீடு என பணத்தைப் பறிக்க.
இந்தத் திட்டத்தின் உண்மையான பெயர் அதானி யோஜனா என இருக்கவேண்டும்.
பயிற்சி, ஓய்வூதியம், ராணுவ வீரர்களுக்கான கேன்டீன் என பணத்தை அதானியின் பாக்கெட்டில் போடவேண்டும் என்றும், இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டைத் திருப்புவதே இதன் நோக்கம்.
அம்பானியின் திருமணத்தைப் பார்த்தீர்களா? அம்பானி திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்தார். இது யாருடைய பணம்? இது உங்கள் பணம்.
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வங்கிக் கடன் வாங்குகிறீர்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேர் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யலாம்.
ஆனால் ஒரு விவசாயி கடனில் மூழ்கி மட்டுமே திருமணத்தை நடத்த முடியும் என்ற கட்டமைப்பை நரேந்திர மோடி உருவாக்கி உள்ளார். இது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் இல்லை என்றால் இது என்ன என கேள்வி எழுப்பினார்.