மகாராஷ்டிராவில் இன்னும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தாதது ஏன்? - ஆதித்ய தாக்கரே கேள்வி
- இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் முன்மொழிய வேண்டும்
- அவர்கள் [ஷிண்டே - பாட்னாவிஸ் - அஜித் பவார் தலைவர்கள்] டெல்லி பயணங்களை ரசித்துக்கொண்டுள்ளனர்
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 இல் 235 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. பாஜக 132 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையை பெற்றது. ஆனாலும் அடுத்த முதல்வரை தேர்வு செய்து ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் ஷிண்டே விட்டுக்கொடுத்த நிலையில் பாஜகவின் பட்னாவிஸ் முதல்வர் ஆவார் என்று கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 5 ஆம் தேதி பதவியேற்பு என்றும் நரேந்திர மோடி வருகிறார் என்றும் மகாராஷ்டிர பாஜக கட்சித் தலைவர் சந்திரசேகர் பவான்குலே எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். மகாராஷ்டிர சட்டமன்றம் கடந்த நவம்பர் 27 ஆம் தேதியே காலாவதியான நிலையில் முதல்வர் இப்பதவியை ராஜினாமா செய்த ஷிண்டே பொறுப்பளாராக நீடிக்கிறார்.
இந்த நிலையில்தான் முடிவு அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் வரை ஆகியும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையாத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை என இந்தியா கூட்டணியில் உள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
முடிவு வெளியாகி 10 நாட்கள் ஆகிறது, பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளது, ஆனால் அவர்கள் இன்னும் ஆட்சி அமைக்கவில்லை... என்ன நடக்கிறது? டிசம்பர் 5-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று மாநில பாஜக தலைவர் அறிவிக்கிறார். அவர் என்ன ஆளுநரா?... இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் முன்மொழிய வேண்டும்" என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய ஆதித்ய தாக்கரே, "முடிவு வெளியாகி ஒரு வாரத்திற்கும் மேலாக ஒரு முதல்வரைத் தீர்மானிக்க முடியாததும், அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை என்பதும் மகாராஷ்டிராவை அவமதிப்பு மட்டுமல்ல, அவர்களின் அன்பான தேர்தல் ஆணையம் வழங்கிய உதவியையும் கூட அவமதிக்கிறது [கிண்டலாக]. விதிகள் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும், சில சிறப்புக் கட்சிகளுக்கு விதிகள் பொருந்தாது.
ஆட்சி அமைக்க உரிமை கோராமல், ஆளுநரிடம் எதையும் காட்டாமல், ஒருதலைப்பட்சமாக பதவிப் பிரமாண தேதியை அறிவிப்பது, அராஜகமாகும். இதற்கு மத்தியில் நமது காபந்து முதல்வர் [ஷிண்டே] ஒரு மினி விடுமுறையில் [சொந்த கிராமத்தில்] இருக்கிறார், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கக் கூடியவர்களுக்கு முன்னுரிமை இல்லை என்று தெரிகிறது. அவர்கள் [மகாயுதி தலைவர்கள்] டெல்லி பயணங்களை ரசித்துக்கொண்டுள்ளனர். இந்நேரம் இங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தாது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.