இஸ்லாமியர் கட்டியதால் தாஜ் மகாலையும் இடிப்பீர்களா? - மசூதி ஆய்வுகள் குறித்து கார்கே சரமாரி கேள்வி
- செங்கோட்டை, தாஜ்மஹால், குதுப் மினார், சார்மினார் கட்டிடங்களையும் பாஜக தலைவர்கள் இடிப்பார்களா?
- மசூதிகளில் சிவலிங்கங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
மசூதியில் கோவில் உள்ளதாக வழக்குப்போடுவது வட மாநிலங்களில் டிரண்ட் ஆகி வரும் நிலையில் செங்கோட்டை, தாஜ் மகால், சார்மினாரையும் இடிப்பீர்களா என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் உத்தரப் பிரதேச சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்குள் கோவில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்ய அதிகாரிகளை மக்கள் எதிர்த்ததால் கலவரம் ஏற்பட்டது. ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் பகுதியில் உள்ள மசூதியிலும் ஆய்வு செய்ய சமீபத்தில் உத்தரவிடப்பட்டது.
இந்த சூழலில் மசூதிகளை சர்வே செய்யும் பணிகளை விமர்சித்து டெல்லி ராம் லீலா மைதானத்தில் அரசியலமைப்பைக் காப்போம் பேரணியில் பேசிய கார்கே பாஜக 1991 வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டத்தை மீறி வருவதாக குற்றம் சாட்டினார்.
முஸ்லிம்களால் கட்டப்பட்ட செங்கோட்டை, தாஜ்மஹால், குதுப் மினார், ஐதராபாத் சார்மினார் போன்ற கட்டிடங்களையும் பாஜக தலைவர்கள் இடிப்பார்களா என்று கேள்வி எழுப்பினார்.
2022 ஆம் ஆண்டில், ராம் ஜென்மபூமி இயக்கத்திற்குப் பிறகு சங்கம் எந்த ஒரு போராட்டத்தையும் தொடங்க விரும்பவில்லை என்றும் மசூதிகளில் சிவலிங்கங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
ஆனால் அவர்கள் அதன்படி நடக்கவில்லை. ஆர்எஸ்எஸ் உதவியுடன் ஆட்சிக்கு வந்த பாஜக ஆர்எஸ்எஸ் சொல்வதை ஏன் கேட்கவில்லை?. 1947ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களின் தற்போதைய நிலையைப் பராமரிக்க 1991ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் நீங்கள் அதையும் பின்பற்றவில்லை. மாறாக நீங்கள் அவற்றை மீறுகிறீர்கள். வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டம் ஆகஸ்ட் 15, 1947 இல் இருந்த மதத் தலங்களின் தன்மையை மாற்றுவதைத் தடை செய்வதை வர சுட்டிக்காட்டினார்.
மதச்சார்பின்மை என்பது இந்து மதத்தை நிராகரிப்பது அல்ல, மாறாக அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதைக்கான கிடைப்பதற்காக இந்தியாவின் கொள்கையை உறுதிப்படுத்துவதே ஆகும், நான் பிறப்பால் இந்து, ஆனால் மதச்சார்பின்மையுடன் மத பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைவரிடத்திலும் ஒற்றுமையையும் அமைதியையும் விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.