கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் பத்திரமாக மீட்பு- நெஞ்சை உருக்கும் வீடியோ
- விவசாய நிலத்தில் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் 27 பன்றிகள் விழுந்துள்ளன.
- இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சார் மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிக்கி தவித்த காட்டுப்பன்றிகளை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
கிணற்றில் சிக்கிய காட்டுப்பன்றிகள் பத்திரமாக மீட்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.
இரவு உணவு தேடி பாலபத்ரபூர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் 27 காட்டுப்பன்றிகள் நுழைந்துள்ளது. விவசாய நிலத்தில் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் 27 காட்டுப்பன்றிகளும் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்துள்ளன.
இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் கிணற்றில் இருந்து காட்டுப்பன்றிகள் வெளியே வருவதற்கு இயந்திரங்கள் கொண்டு சரிவுப் பாதை அமைத்தனர். பின்னர் அந்த பாதை வழியாக காட்டுப்பன்றிகள் கிணற்றை விட்டு பத்திரமாக வெளியே வந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய வனத்துறை அதிகாரி, "ஒரு குட்டி காட்டுப்பன்றி முதலில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம், பின்பு அதை மீட்பதற்காக ஒவ்வொரு பன்றியும் உள்ளே விழுந்திருக்கலாம் என்றும் இந்தச் சம்பவத்தில் ஒரு ஒரு குட்டி காட்டுப்பன்றி இறந்ததாகவும், மீதமுள்ள 26 காட்டுப்பன்றிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டது" என்று தெரிவித்தார்.
தனியார் விவசாய நிலத்தில் இந்த கிணறு தோண்டப்பட்டுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கிணற்றை மூடி வைக்குமாறு சம்பந்தப்பட்ட விவசாயியிடம் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.