இந்தியா (National)

பாபா சித்திக் கொலை: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணிநேரத்தில் அழித்து விடுவேன்- பப்பு யாதவ்

Published On 2024-10-13 16:24 GMT   |   Update On 2024-10-13 16:24 GMT
  • முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
  • பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.

பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் பாபா சித்திக் கொலை வழக்கில் தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19), குர்மாயில் பல்ஜித் சிங் (23) ஆகிய 2 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இருவருடன் இணைந்து குற்றத்தில் ஈடுபட்ட 3 ஆவது நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல ரவுடிகளுடன் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு உள்ளது.

இருப்பினும், இந்த கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், சட்டம் அனுமதித்தால், லாரன்ஸ் பிஷ்னோயின் ஒட்டுமொத்த கும்பலையும் 24 மணி நேரத்தில் அழித்துவிடுவேன் என்று பீகார் எம்பி பப்பு யாதவ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய பப்பு யாதவ், "சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி (லாரன்ஸ் பிஷ்னோய்) அரசாங்கத்திற்கு சவால் விடுகிறான். மக்களைக் கொன்று கொண்டிருக்கிறான், எல்லோரும் அமைதியாக இதை பார்த்து கொண்டிருக்கிறோம்.

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா மற்றும் கர்னி சேனா தலைவரின் கொலையில் பிஷ்னோய் முக்கியப் பங்கு வகித்துள்ளார். தற்போது பாபா சித்திக் கொலை வழக்கில் அவன் சம்பந்தப்பட்டுள்ளான்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News