இந்தியா

ரூ.25,15,52,875.00... முன்னாள் பணியாளரிடம் விப்ரோ கேட்கும் நஷ்ட ஈடு

Published On 2024-01-01 12:29 GMT   |   Update On 2024-01-01 12:29 GMT
  • பணியாளர்களுடன் மென்பொருள் நிறுவனங்கள் "நான்-காம்படீஷன்" ஒப்பந்தம் போடுவது வழக்கம்
  • விப்ரோவிலிருந்து விலகிய ஜதின், 3 மாதங்களில் காக்னிசன்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்

கல்லூரி முடித்து வேலை தேடும் இந்திய இளைஞர்களுக்கு மென்பொருள் துறைதான் கனவுத்துறையாக உள்ளது. ஏசி அறை வேலை, வெளிநாடு செல்லும் வாய்ப்பு, அதிகளவு ஊதியம், அதிக எண்ணிக்கையில் விடுமுறைகள் என பல காரணிகள் இதற்கு கூறப்படுகின்றன.

ஆனால், அத்துறையில் ஒரு நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனம் மாற வேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதல்ல. போட்டி நிறுவனத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு தங்கள் பணியாளர்கள் சேர்வதை தடுக்கும் விதமாக மென்பொருள் நிறுவனங்கள் "நான்-காம்படீஷன்" (non-competition) ஒப்பந்தங்கள் போடுவது பரவலான வழக்கம்.

இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர் அஜிம் பிரேம்ஜி (Azim Premji). இவர் துவங்கிய மென்பொருள் நிறுவனம் விப்ரோ (Wipro). தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் போட்டி நிறுவனங்களில் சேர்வதற்கு சுமார் 12 மாதங்களுக்கு விப்ரோ தடை செய்திருந்தது.

2002ல் விப்ரோவில் சேர்ந்து 21 வருடங்கள் தலைமை நிதி அதிகாரியாக பணி புரிந்தவர் ஜதின் தலால் (Jatin Dalal). இவர் தேசிய தொழில்நுட்ப மையத்தில் (National Institute of Technology) பொறியியல் பட்டம் பெற்றவர்.

விப்ரோவில் ரூ.12 கோடியாக இருந்த அவரது ஆண்டு ஊதியம், ரூ.8 கோடியாக குறைந்தது.

இதையடுத்து, அந்நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்த ஜதின், 3 மாதங்களில் காக்னிசன்ட் (Cognizant) எனும் வேறொரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்தார்.

இதையடுத்து அவரிடம் ரூ.25,15,52,875.00 நஷ்ட ஈடு கோரி விப்ரோ வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணை ஜனவரி 3 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

காக்னிசன்ட் நிறுவனத்தில் ஜதினுக்கு ரூ.43 கோடி ஆண்டு ஊதியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News