129 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்
- ஆர்ஜேடி கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ், பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வரானார்
- 243 இடங்கள் உள்ள சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 இடங்கள் வேண்டும்
பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார்.
கடந்த ஜனவரி 28 அன்று அக்கூட்டணியிலிருந்து விலகி, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.
இன்று நிதிஷ் குமார் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பீகார் மாநில சட்டசபையில் 243 இடங்கள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது.
முன்னதாக, சபாநாயகர் அவத் பீகாரி சவுத்ரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து சவுத்ரி பதவி விலகி, துணை சபாநாயகர் மகேஸ்வர் அசாரி (Maheswar Hazari) புதிய சபாநாயகராக பொறுப்பேற்றார்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாவினர். தேஜஸ்வி யாதவ் தலைமையில் எதிர் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதிய சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பில் 129 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவளித்ததால் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார்.