குடிபோதையில் இளைஞன் ஓட்டிய BMW கார் மோதி பெண் உயிரிழப்பு.. சிவசேனா புள்ளியின் மகனுக்கு வலை
- படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
- இளைஞர் மிஹிர் ஷாம் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன்
பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெளிப்படையாகவே இந்த வித்தியாசத்தை அன்றாடம் நம்மால பார்க்கவும் உணரவும் முடிகிறது. அந்த வகையில் சாலைகளில் பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் சொகுசு கார்கள் இடித்து சாமானிய மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் மது அருந்திவிட்டு ஓட்டிய சொகுசு கார் இடித்து 2 இளம் ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவத்தில் சிறுவனை காப்பாற்ற அவனது குடும்பம் பணம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியது. இந்த வழக்கு பரபரப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது மும்பையில் முக்கிய புள்ளி ஒருவரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் காவேரி நாக்வா என்ற பெண் மீன் வாங்க சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட கணவனும் மனைவியும் காரின் முன்புற பானட் பகுதியில் சிக்கினனர். அவர்கள் மீது மோதியதும் இளைஞர் அங்கிருந்து தப்பிக்க காரை வேகமாக இயக்கியுள்ளார். அப்போது சமாளித்துக்கொண்டு கணவர் தப்பிக்கவே, மனைவி காவேரி பானட்டில் சிக்கியபடி 100 மீட்டர் தொலைவுக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.
இதனால் படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்படுத்திய அந்த இளைஞர் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 24 வயதுடைய அந்த இளைஞர் மிஹிர் ஷாம் என்பதும் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது மிஹிர் தப்பித்த நிலையில் அவரின் தந்தை ராஜேஷ் ஷாவை போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர்.