திருவனந்தபுரத்தில் மேம்பாலத்தில் இருந்து ஸ்கூட்டருடன் விழுந்து பெண் பலி
- சகோதரி-3 வயது மகள் படுகாயம்.
- வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் வெள்ளார் பகுதியை சேர்ந்தவர் சிமி(வயது35). நேற்று சிமி மற்றும் அவரது 3 வயது மகள் சிவன்யா, சகோதரி சினி(35) ஆகிய 3பேரும் ஸ்கூட்டரில் சென்றனர். சினி ஸ்கூட்டரை ஓட்ட, சிமி தனது மகளுடன் பின்னால் அமர்ந்து பயணித்தார்.
திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெண்பால வட்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்கூட்டர் திடீரென சினியின் கட்டுப்பாட்டை மீறி ஓடி, பாலத்தில் மேலே இருந்து தடுப்புச்சுவரை தாண்டி கீழே இருந்த சர்வீஸ் சாலையில் விழுந்தது.
பல அடி உயரத்தில் இருந்து ஸ்கூட்டருடன் 3 பேர் கீழே விழுந்ததை அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் சிமி, அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிமி பரிதாபமாக இறந்தார். அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிமி உள்ளிட்ட 3 பேரும் மேம்பாலத்தில் இருந்து ஸ்கூட்டருடன் சர்வீஸ் சாலையில் விழுந்தது ஏதே சினிமாவில் பார்த்தது போன்று இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிமி உள்ளிட்டோர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.