பெண் டாக்டர் கொலை: டெல்லி உயர்நீதிமன்ற பார் கவுன்சில் கடும் கண்டனம்
- பெண் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
- இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது மேற்கு வங்காள அரசு தனது பலத்தைக் காட்ட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.
இந்த நிலையில், பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு டெல்லி உயர்நீதிமன்ற பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பார் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட அவசர கூட்டத்தில், அதன் செயற்குழு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தது.
மேலும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தியது. நீதியை உறுதி செய்வதற்காக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு போனோ சார்பான சட்ட உதவிகளை வழங்கவும் முடிவு செய்தது.
ஒற்றுமை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் கவுரவிக்கும் வகையில், ஆகஸ்ட் 21, 2024 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற பார் கவுன்சில் உறுப்பினர்கள் வெள்ளை நிற ரிப்பன் பேண்டுகளை அணிய வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.