இந்தியா

கெஜ்ரிவால் வீட்டை நெருங்கிய வெள்ளம்: டெல்லியில் இரண்டு நாட்களாக மழை குறைந்தும் வெள்ளம் சூழ்ந்தது ஏன்?

Published On 2023-07-13 04:13 GMT   |   Update On 2023-07-13 05:22 GMT
  • அரியானா தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீரால் டெல்லிக்கு ஆபத்து
  • இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் யமுனை ஆற்றில் வெள்ளம்

தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியே வர முடியாத நிலை நீடிக்கிறது.

இன்றும் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்யும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளது. என்றாலும், யமுனை ஆற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நீர்மட்டம் 208.46 மீட்டரை தாண்டியுள்ளது. காலை ஆறு மணிக்கு 208.41 மீட்டராக இருந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் டெல்லியின் தாழ்வான பகுதிக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சிவில் லைன் ஏரியாவில் ரிங் சாலை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. மஞ்சு கா திலாவை ஜம்மு காஷ்மீர் கேட் உடன் இணைக்கும் பகுதி மூடப்பட்டுள்ளது. இந்த இடம் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவிலேயே உள்ளது. அதேபோல் டெல்லி மாநில சட்டமன்றம் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ளது.

மழை நின்ற பின்னரும், டெல்லிக்கு ஏன் இந்த ஆபத்து? என்ற கேள்வி எழுந்துள்ளது. யமுனை ஆறு உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி மாநிலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளை உள்ளிடக்கியதாகும்.

இந்தப் பகுதியில் மழை பெய்தால் வெள்ளம் யமுனை ஆற்றுக்கு வந்து சேரும். தற்போது உத்தரகாண்ட், இமாசல பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் அங்கிருந்து வெள்ளம் யமுனை ஆற்றில் கலக்கிறது. இதன் காரணமாக அரியானாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து அபாய கட்டத்தை தாண்டியுள்ளது.

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து நீர் திறந்து விடப்படுவதை தடுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளார். ஆனால் மத்திய அரசு, அரியானா தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவில்லை. உபரி நீர்தான் தடுப்பணையில் இருந்து வெளியேறுகிறது என பதில் அளித்துள்ளது.

இன்று மதியம் 2 மணியில் இருந்து தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் யமுனை ஆற்றின் கரையோரம் வசித்த மக்கள் பாதுப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளர்.

இதுவரை இல்லாத அளவிற்கு யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. டெல்லி வரலாறு காணாத மழையை பெற்றுள்ளது.

Tags:    

Similar News