இந்தியா

ராகுலின் நடைபயணம் சாதிக்கப்போவது என்ன?: சசி தரூர் பரபரப்பு பேட்டி

Published On 2022-09-07 02:05 GMT   |   Update On 2022-09-07 02:05 GMT
  • ராகுல் காந்தி இன்று பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் தொடங்க உள்ளார்.
  • குலாம்நபி ஆசாத் என் மதிப்புக்குரிய மூத்த தலைவர்.

திருவனந்தபுரம் :

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் 'பாரத் ஜோடோ யாத்ரா' (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் நடைபயணம் தொடங்க உள்ளார்.

இந்த தருணத்தில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவரும், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவருமான மூத்த தலைவர் சசி தரூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- காங்கிரஸ் கட்சி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்வதை விட காங்கிரஸ் ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று குலாம்நபி ஆசாத் போன்றோர் விமர்சித்துள்ளார்களே, இதில் உங்கள் கருத்து என்ன?

பதில்:- குலாம்நபி ஆசாத் என் மதிப்புக்குரிய மூத்த தலைவர். அவா் குறிப்பிட்ட கருத்து பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.

ஆனால் இந்திய ஒற்றுமை பயணம் இந்தியாவில் ஒற்றுமையை ஏற்படுத்தும், காங்கிரசில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும். விழுமியங்கள், லட்சியங்கள் மற்றும் மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாட்டை ஒருங்கிணைக்கக்கூடிய கட்சி காங்கிரஸ்தான்.

கேள்வி:- காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நீங்கள் போட்டியிடுவது தொடர்பான வாய்ப்பு பற்றி?

பதில்:- நான் தேர்தல் நடத்தப்படுவதைத்தான் வரவேற்றேன். இது கட்சிக்கு நல்லது என்று நம்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ள வேறு எந்த கட்சி அதன் தலைவர் பதவிக்கு வெளிப்படையான தேர்தல் நடத்துகிறது?

ஜனநாயக கொள்கையின் இந்த பொதுவான அறிக்கை, நான் போட்டியிடுவதற்கான வாய்ப்பை நாடு முழுவதும் உள்ள ஏராளமானோர் உடனடியாக வரவேற்க வழிவகுத்தது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நான் போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளேன்.

கேள்வி:- பா.ஜ.க. தலைவர் அத்வானி 1990-களின் முற்பகுதியில் மேற்கொண்ட ரத யாத்திரை போன்ற சமூக அரசியல் தாக்கத்தை இந்த இந்திய ஒற்றுமை பயணம் ஏற்படுத்துமா?

பதில்:- அது சாத்தியம்தான். ஆனால் பயணம் தொடரும்போதுதான் அதன் தாக்கத்தை அளவிட முடியும். காங்கிரசின் கொள்கைகள் மற்றும் மதிப்புகளுக்கு இது அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி:- இந்த நடைபயணம் கட்சிக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்துமா?

பதில்:- நிச்சயமாக நான் அதை நம்புகிறேன்.

மற்ற கட்சிகள், அரசியல் சார்பில்லாத தனிநபர்கள், சிவில் சமூக குழுக்கள் உள்பட அனைவருடனும் நாங்கள் பணியாற்றும் வேளையில், ஒரு அரசியல் கட்சியால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பெரிய நடவடிக்கையும் சந்தேகத்துக்கு இடமின்றி, ஒரு அரசியல் செய்தியைக் கொண்டுள்ளது. அந்த செய்தி, இந்தியாவை ஒருங்கிணைக்க இயலக்கூடிய கட்சி எங்கள் கட்சி என்பதுதான். இது பொதுமக்களால் ஈர்க்கப்படுகிறபோது, அது கட்சிக்கு மறுமலர்ச்சியைத் தொடங்கி வைக்கும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Tags:    

Similar News