பெருந்தலைவரை பற்றிய சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக ...
- தூய அரசியல் வாழ்வை வாழ்ந்து காட்டியவர் காமராஜர்.
- நம் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பவர் பெருந்தலைவர் காமராஜர்.
பெருந்தலைவரும், காமராஜரும் ஒருவர்தானே...?
தலைப்பு குழப்புகிறதே என குழம்ப வேண்டாம்.
நாட்டு நலனே முக்கியம் என தூய அரசியல் வாழ்வை வாழ்ந்து காட்டி நம் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருப்பவர், பெருந்தலைவர் காமராஜர். இவருடைய தங்கை நாகம்மாள். இவருக்கு ஜவகர், மோகன் என 2 மகன்கள்., மங்கலம், கமலம் என 2 மகள்கள். இவர்களில் ஜவகரின் மகன் காமராஜ்.
அதாவது, பெருந்தலைவரின் தங்கை வழி பேரன். வயது 60. இந்த காமராஜை விருதுநகரில் சந்தித்தோம். பெருந்தலைவர் குறித்து பல சுவாரசிய தகவல்களை கூறினார். அதை இங்கே கேட்போம்.
"எங்கள் தாத்தா சிறு வயதிலேயே இறந்துவிட்டார். இதனால் எங்கள் பாட்டியையும், அவரது பிள்ளைகளையும் (அதாவது காமராஜரின் தங்கை மற்றும் குழந்தைகள்) பாதுகாத்து கரை சேர்ப்பது உன் பொறுப்பு என காமராஜரிடம் அவரது தாயார் சிவகாமி தெரிவித்துள்ளார்.
அதன்படி அவரும் கடைசி வரை எங்கள் குடும்பத்தினரை வளர்த்து ஆளாக்கி, தனது கடமையை செய்தார். அவரை ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதற்காக அவர் உயிரோடு இருந்தபோதே காமராஜ் என எனக்கு பெயர் வைத்தனர்.
குடும்பத்தினர் அனைவர் மீதும் அளவு கடந்த அன்பு கொண்டு இருந்தார் காமராஜர்.
நான் சிறுவனாக இருந்தபோது என்னிடம் அடிக்கடி அவர் கூறிய அறிவுரைகள் இப்போதும் நல்ல ஞாபகத்தில் உள்ளன. நல்ல பழக்கங்களை பழக வேண்டும். கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என எப்போதும் கூறுவார். அவர் இருக்கும் வரை விருதுநகரில் உள்ள எங்கள் வீட்டில் (அந்த வீடு காமராஜர் நினைவு இல்லமாக பின்னாளில் மாற்றப்பட்டது) கூட்டுக்குடும்பமாகவே இருந்தோம்.
எனக்கு 10 வயதாக இருந்தபோது அவர் காலமானார். தமிழக முதலமைச்சராக இருந்தபோது, எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சாதாரண மனிதர் போலவே வந்து பங்கேற்றுள்ளார்.
எங்கள் குடும்பத்தினர் ஒருவர், அவரிடம் தனக்கு எம்.எல்.ஏ சீட் கேட்டுள்ளார். அதற்கு பெருந்தலைவர், உங்களுக்கு அரசியல் தேவையில்லை. தொழிலையும், குடும்பத்தையும் நல்லபடியாக கவனியுங்கள் என்று மறுத்துவிட்டார்.
சிறுவனாக இருந்தபோது பள்ளி விடுமுறை காலங்களில் சென்னைக்கு சென்று இருக்கிறேன். அங்கு அவர் நல்லபடியாக பார்த்துக்கொண்டார்.
விருதுநகர் வீட்டில் அவர் எந்த வசதியையும் செய்து கொடுக்கவில்லை. நான் பிறந்தபோதுதான் அந்த வீட்டில் மின்விசிறியே பொருத்தியுள்ளனர். முதலமைச்சராக இருந்தபோதும், மற்ற நேரங்களிலும் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பியது இல்லை.
அந்த நிகழ்ச்சிக்கு ஆகும் செலவுத்தொகையை கொண்டு ஏழைகள் பயன்பெற செய்யலாம் என்று கூறி இருக்கிறார். இதனால் நாங்கள் அவரது பிறந்தநாளை எளிமையாக வீட்டிலேயே இனிப்புகளை பரிமாறி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.
அதுபோல அவரது தங்கை வாரிசுகள் என்பதால் பல்வேறு நபர்கள், அரசியலில் ஈடுபட அழைத்தார்கள். ஆனால் காமராஜரின் நற்பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக தவிர்த்து விடுவோம்.
நாங்களும் அவரது பெயரை சொல்லி எந்த பலனையும் யாரிடமும் எதிர்பார்ப்பதில்லை. சிபாரிசு கூடாது என்பதில் அவர் கறாராக இருந்தார். அதை நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
நம்மிடம் இருப்பதை கொண்டு வாழ பழக வேண்டும். அடுத்தவர்களை பார்த்து வாழ நினைக்கக்கூடாது என்பது அவரது வேதவாக்கு. அதை சிறு வயதில் கேட்டதில் இருந்து இப்போது வரை நான் கடைபிடித்து வருகிறேன். பெருந்தலைவர் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தால் நல்லபடியாக வாழ்ந்து வருகிறோம்.
பெரும்பாலும் யாரிடமும் காமராஜரின் நெருங்கிய உறவினர் என்பதை வெளிப்படுத்தமாட்டோம். தவிர்க்க முடியாத இடங்களில் தெரியவந்தால் அவரைப்பற்றிய பெருமையான விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.
சமீபத்தில் சாத்தூரில் எங்கள் உறவினர் ஒருவர் வீடு ஒன்றை வாங்கினார். அந்த வீட்டை விற்றவர், பெருந்தலைவர் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். வீட்டை வாங்க வந்திருப்பது காமராஜரின் குடும்பத்தை சேர்ந்தவர் என தெரியவந்ததும், ஒரு குறிப்பிட்ட தொகையை விட்டுக்கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு அவர், காமராஜர் பவனம் என்றே பெயர் வைத்திருந்தார். அந்த பெயரை மட்டும் நீ்ங்கள் தொடர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என கூறியதைக்கேட்டு நாங்கள் கண் கலங்கிவிட்டோம்.
அந்த வீட்டுக்கு ஏன் காமராஜர் பவனம் என பெயர் வைத்தார் என்பதை அவர் கூறியதை கேட்டு எங்களுக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டது.
அதாவது, சுதந்திர போராட்ட காலங்களில் ஆங்கிலேயர்களிடம் இருந்து தலைமறைவாக இருப்பதற்காக காமராஜர், அந்த வீட்டுக்கு சென்றுதான் அவ்வப்போது தங்கி இருந்துள்ளார். அதனால்தான் அந்த வீட்டினர் காமராஜர் பவனம் என பெயரிட்டது அப்போதுதான் எங்களுக்கே தெரியவந்தது.
எக்காரணம் கொண்டும் காமராஜரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என எங்கள் பாட்டி எங்களிடம் கண்டித்து கூறியுள்ளார்.
உயர் பதவிகளில் இருந்தபோதும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனக்கோ, தன்னை சார்ந்தவர்களுக்கோ எந்தவித ஆதாயத்தையும் பெறக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்து உள்ளார். இதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது உறவினர்கள் யாராவது ஆதாயம் அடைய முயன்றதாக தெரிந்தால் கடுமையாக கண்டிப்பார்.
எனது பாட்டிக்கோ, என் தாயாருக்கோ உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறுதான் அறிவுறுத்தி இருக்கிறார். தனியார் மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கவே மாட்டார்.
இதுபோல பல்வேறு நபர்கள் காமராஜரை பற்றி எண்ணற்ற தகவல்களை கூறி இருக்கிறார்கள். மொரார்ஜி தேசாய், ராமகிருஷ்ண ஹெக்டே, கருணாநிதி என ஏராளமான அரசியல் தலைவர்களும் இப்போது நாங்கள் இருக்கும் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள்.
இவ்வாறு பெருந்தலைவரின் தங்கை வழி பேரனான காமராஜ் கூறினார்.
நாம் அனைவருமே காமராஜரின் எளிமையையும், பொதுவாழ்வில் நேர்மையையும், நிர்வாக திறனையும் பின்பற்றுவதே அவருக்கு ஆற்றும் தொண்டு ஆகும்.