தாவரவியலில் புதுமை படைத்த இந்திய பெண் விஞ்ஞானி
- மரபணு ஆய்வியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்த ஜானகி, `ஜானகி பிரிஞ்சால்’ எனப்படும் புதிய வகைக் கத்திரிக்காயை உருவாக்கினார்.
- இந்திய வகைக் கரும்பை பப்புவா நியூகினியா நாட்டு வகைக் கரும்புடன் கலப்பு செய்து, அதிக இனிப்புத் தன்மை கொண்ட புதிய ஹைபிரிட் கரும்பு வகையை உருவாக்கத் துணைபுரிந்தார் ஜானகி.
"பிறக்கும்போதே கிழவியாகப் பிறந்திருக்கக் கூடாதா என்று அடிக்கடி நான் எண்ணுவதுண்டு. அப்படி இருந்தால், எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்".
எத்தனை ஏக்கம் மிகுந்த வரிகள்! இந்த வரிகளை தன் மனக்குமுறல்களாக எழுத்தில் வடித்து தன் அண்ணனுக்கு கடிதமாக அனுப்பிய அந்த இளம்பெண்ணுக்கு இதை எழுதும்போது பத்தொன்பது வயது.
எந்தளவிற்கு இந்த சமூகம் பெண்களை நடத்திவந்துள்ளது என்பதற்கு இவை மட்டுமல்ல! இன்னும் ஒரு படி மேலே போய் நேரடியாக தான் படும் துன்பங்களை, "ஆணாதிக்கமும் சாதியப் புறக்கணிப்பும் என்னை மூச்சுமுட்ட வைக்கிறது" என்று இலண்டன் ஆசிரியருக்கும் கடிதம்வழி தன் மனக்குமுறல்களை எழுதியுள்ளார்.
ஆனால், அத்தனை தடைகளையும் மீறி தன் தாவர அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் இந்திய நாட்டில் விளையும் கரும்புகளுக்கு அதிக இனிப்புச்சுவையை தந்தவர். அந்நிய நாட்டின் இறக்குமதியை குறைத்தவர். பல்வேறு வகை புதிய செடிகளை, ரோஜா மலர்களை இந்தியாவிலும், இங்கிலாந்திலும் உருவாக்கியவர். இந்தியாவின் பல்லுயிரியலைக் கண்டறிந்து பாதுகாக்க உதவியவர்.
தான் பிறந்த ஊரில் உள்ள பெரும்பாலான பெண்கள் உயர்நிலைப் பள்ளியைத் தாண்டி கல்வியைத் தொடரவில்லை என்ற போதிலும், ஆண் பேரினவாத, தீவிர பழமைவாத சமூகம் தனக்கு தடையாக இருந்தபோதிலும், இயற்கையை உயிராக நேசித்த ஒரு பெண், ஆய்வு மனப்பான்மையோடு திருமண வாழ்வை புறக்கணித்து பல்லுயிரியல் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.
தன் வாழ்நாள் முழுக்க தாவரவியலில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்றதோடு பத்மஸ்ரீ விருதையும் வென்ற இந்தியாவின் முதல் பெண் தாவரவியல் விஞ்ஞானி என்பது எவ்வளவு பெருமை தரும் செய்தி. அவர்தான் கேரளத்தின் தலச்சேரியில் பிறந்த பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இயற்கையின் காதலி ஜானகி அம்மாள்.
சென்னை மாகாணத்தின் கீழ் துணை நீதிபதியாக இருந்த திவான் பகதூர் இ.கே.கிருஷ்ணனுக்கும் தேவயானிக்கும் மகளாக கேரளாவின் தலச்சேரியில் நவம்பர் 4, 1897ல் பிறந்தார் ஜானகி. ஜானகியின் தந்தையான கிருஷ்ணனின் முதல் மனைவி சாரதா ஆறு குழந்தைகள் பெற்றபின் இறந்துவிட்டதால், தேவயானியை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் கிருஷ்ணன். தேவயானிக்கு பதிமூன்று குழந்தைகள் பிறந்தனர். அதில் பத்தாவதாக பிறந்தவர்தான் ஜானகி அம்மாள்.
ஐரோப்பியர் போன்று உயரமும், இந்திய தோற்றமும் கொண்ட அழகான பெண்ணான ஜானகி, தனது கல்விக் கனவுகளை மிகுந்த பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்த துணிச்சல்மிக்க பெண்ணாவார்.
இயற்கை அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜானகியின் தந்தை கிருஷ்ணன், எடவலத் என்ற இடத்தில் உள்ள தன்னுடைய கடற்கரை நோக்கிய வீட்டில் பல்வேறு தாவரங்களையும், மூலிகைச் செடிகளையும் உள்ளடக்கிய மிகப்பெரிய தோட்டத்தை அமைத்திருந்தார்.
பள்ளிக்கல்விக்கு பிறகு, தனது சகோதரிகளில் பலர் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் மூலம் திருமணம் செய்துகொள்வதை ஜானகி கவனித்து வந்தார். தனக்கான முறை வந்ததும், அவர் திருமணத்தை மறுத்துவிட்டு உயர்கல்வியை தேர்ந்தெடுத்தார்.
மலபாரிலிருந்து சென்னைக்கு வந்து, சென்னை ராணி மேரி கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், 1921-ல் மாநிலக் கல்லூரியில் தாவரவியலில் ஹானர்ஸ் பட்டமும் பெற்ற ஜானகி அம்மாள், சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராக ஓராண்டு பணியாற்றினார். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயில லெவி பார்பர் கல்வி உதவித்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்றைக்கு நூறாண்டுக்கு முன்பு இந்தியாவிலும், உலக அளவிலும் பெண்கள் உயர்கல்வி பெறுவதென்பது அரிதாகவே இருந்தபோது ஜானகி, முதுகலை பயிலவும், ஆராய்ச்சி பட்டம் பெறுவதற்காகவும், அமெரிக்காவை நோக்கிச் செல்லவும் தயாரானார்.
அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1925-ல் தாவர மரபியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். திரும்பிவந்து சென்னை கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் பணியைத் தொடர்ந்த அவர், மீண்டும் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக் கல்விக்கு தேர்வானார். 1931-ம் ஆண்டு அமெரிக்காவில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.
படிக்கும் காலத்திலேயே, சைட்டோஜெனெடிக்ஸ் எனப்படும் மரபணு ஆய்வியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்த ஜானகி, `ஜானகி பிரிஞ்சால்' எனப்படும் புதிய வகைக் கத்திரிக்காயை உருவாக்கினார்.
அமெரிக்காவில் இருந்து திரும்பும்போது லண்டனுக்கு அருகில் உள்ள ஜான் இன்னஸ் ஆய்வு நிறுவனத்தில் தங்கி ஓராண்டு ஆய்வு செய்தார் ஜானகி. இங்குதான் ஆசிரியர் சிரில் டீன் டார்லிங்டனைச் சந்தித்தார். இருவருக்குள்ளும் காதல் அரும்பினாலும் கைகூடாத காதலாகவே அது நின்றுவிட்டது.
லண்டனில் இருந்து திரும்பியவுடன், திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜா அறிவியல் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக 1932 முதல் 1934 வரை பணியாற்றினார்.
1935-ல் பிரபல விஞ்ஞானியும், நோபல் பரிசு பெற்றவருமான சர்.சி.வி.ராமன் இந்திய அறிவியல் அகாடமியை நிறுவியபோது, ஜானகியை அங்கு ஆராய்ச்சியாளராக இணைந்து பணியாற்ற வருமாறு அழைத்தார். ஆனால், பல காரணங்களால் அவரால் அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை.
சைட்டோஜெனெடிக்ஸ் நிபுணரான ஜானகி, அடுத்ததாக, கோயம்புத்தூரில் உள்ள இம்பீரியல் சுகர் கேன் இன்ஸ்டிடியூட் எனப்படும் கரும்பு வளர்ப்பு நிலையத்தில் கரும்பு உயிரியலில் பணியாற்ற சேர்ந்தார். அந்த நேரத்தில், உலகின் இனிமையான கரும்பாக இருந்தது பப்புவா நியூ கினியாவிலிருந்து சக்காரம் அபிசியனாரம் வகையாகும். இந்தியா அதை தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது.
இந்திய வகைக் கரும்பை பப்புவா நியூகினியா நாட்டு வகைக் கரும்புடன் கலப்பு செய்து, அதிக இனிப்புத் தன்மை கொண்ட புதிய ஹைபிரிட் கரும்பு வகையை உருவாக்கத் துணைபுரிந்தார் ஜானகி. கோ-கேன் என்று பெயரிடப்பட்ட அந்தக் கரும்பு உற்பத்தி சில ஆண்டுகளில் இரட்டிப்பானதால், இந்தியா கரும்பு இறக்குமதியைக் குறைக்கத் தொடங்கியது. அதிக மகசூல் தரும் கலப்பின வகையை இனப்பெருக்கம் செய்வதில் பெரும் வெற்றியடைந்தார் ஜானகி அம்மாள்.
எத்தனைதான் சாதனைகள் செய்தாலும், செய்வது ஒரு பெண் என்றால் விட்டுவிடுமா இந்த கேடுகெட்ட சமூகம்? உயர் சாதி ஆண் அலுவலர்கள் பணியாற்றும் கோயம்புத்தூர் நிறுவனத்தில் சாதி மற்றும் பாலினப் பாகுபாடுகளால் ஜானகி அம்மாள் மிகவும் வஞ்சிக்கப்பட்டார். திருமணம் ஆகாத ஒற்றைப் பெண்ணாக இருந்த ஜானகிக்கு அச்சூழ்நிலையே அந்த நாட்களில் வாழ்க்கையை நரகமாக்க போதுமானதாக இருந்தது. அவரது மூத்த சகாக்களால் கடைப்பிடிக்கப்பட்ட ஆணாதிக்கமுறை மிகவும் வெளிப்படையாகவே இருந்தது. மேலும், ஒரு சர்வதேச பத்திரிகையில் வெளியிடுவதற்காக அவர் சமர்ப்பித்த ஒரு ஆய்வுக் கட்டுரை வேண்டுமென்றே தடுக்கப்பட்டது.
தன் மனதின் வேதனைகளையும், தான் அனுபவிக்கும் துன்பங்களையும் பற்றி டார்லிங்டனுக்கு "ஆணாதிக்கமும் சாதியப் புறக்கணிப்பும் என்னை மூச்சுமுட்ட வைக்கிறது" என்று கடிதம் எழுதினார். அப்படியானால் லண்டன் வந்துவிடுமாறு டார்லிங்டன் அழைத்ததை ஏற்றுக்கொண்டு புறப்படத் தயாரானார் ஜானகி.
1940-ல் இரண்டாம் உலகப் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் என்பதையும் பொருட்படுத்தாமல், புடவை மடிப்புகளுக்குள் கபோக் என்ற தன் செல்ல அணிலை வைத்துக்கொண்டு லண்டன் வந்து சேர்ந்தார் ஜானகி. ஜான் இன்ஸ் தோட்டக்கலை நிறுவனத்தில் உதவி சைட்டாலஜிஸ்ட்டாக சேர்ந்தார். 1940 முதல் 1945 வரை இந்த நிறுவனத்தில் பணிபுரிந்தார் ஜானகி.
தலைக்கு மேலேயே விர்விர் என்று பறக்கும் ஜெர்மனியின் குண்டுவீசும் போர்விமானங்களின் சத்தத்திற்கு பயந்து கட்டிலுக்கு அடியில் உறங்கி, காலையில் சத்தத்தால் உடைந்த கண்ணாடித் துண்டுகளை பெருக்கித் தள்ளிவிட்டு அலுவலக வேலைபார்க்கச் சென்றுவிடுவார்.
ஜானகி அம்மாளின் திறமை மற்றும் மதிப்பை உணர்ந்த ராயல் ஹார்டிகல்ச்சுரல் சொசைட்டி (RHS) விஸ்லியில் உள்ள தங்கள் வளாகத்தில் சைட்டாலஜிஸ்ட்டாக பணிபுரிய அழைத்தது. 1946-51 வரை விஸ்லியில் அதிநவீன ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார் ஜானகி அம்மாள். விஸ்லியில் அவர் கழித்த ஆண்டுகள், உலகின் மிகவும் திறமையான சைட்டாலஜிஸ்டுகள், மரபியலாளர்கள் மற்றும் தாவரவியலாளர்களை சந்திக்க உதவியது.
மக்னோலியா பூக்கள்மீது பெரும் காதல் கொண்ட ஜானகி, பணியிடத்தில் புதுவிதமான மக்னோலியா பூக்களை 'பாலிப்ளாய்டு' ஆய்வு மூலம் உருவாக்கினார். "மக்னோலியா கோபஸ் ஜானகியம்மாள்" எனப் பெயரிடப்பட்ட அந்த மலர்கள், இன்றும் விஸ்லே பார்க்கில், அவர் நட்டுவைத்த மரங்களில் பூத்துக் குலுங்குகின்றன. லண்டனில் ஒரு தாவரத்தின் பெயராக இந்தியப் பெண் ஒருவரது பெயர் அமைந்தது இதுவே முதன்முறை. இத்தனை சாதனைகளையும் போருக்கு மத்தியில், சரியான உணவுகூட கிடைக்காத சூழலில் நிகழ்த்தினார்.
இக்கால கட்டத்தில்தான் ஜானகியும் அவரது வழிகாட்டியான சிடி டார்லிங்டனும் இணைந்து `குரோமோசோம் அட்லஸ் ஆப் கல்டிவேட்டட் பிளான்ட்ஸ்' என்ற சிறந்த நூலையும் எழுதினர்.
இந்தியப் பிரதமர் நேரு, 1950-ல் விமானப் பயணம் ஒன்றில் டாக்டர் ஜானகியைச் சந்தித்தார். அவரது சாதனைகளை அறிந்த அவர், இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தை மேம்படுத்த ஜானகி வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். எப்படியோ அதனை ஏற்றுக்கொண்ட ஜானகி 1951-ல் இந்தியா திரும்பி கல்கத்தாவில் உள்ள பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியாவில் பணியில் இணைந்தார். அங்கு பல்வேறு மாற்றங்களை செய்ததன் மூலம் அதன் நிர்வாகப் பொது இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். அறிவியல் மையம் ஒன்றின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்த முதல் பெண் என்ற பெருமையும் பெற்றார் ஜானகி.
1970-ம் ஆண்டில், இந்திய அரசாங்கம் 8.3 சதுர கிலோமீட்டர் பழமையான பசுமையான வெப்பமண்டல காடுகளை வெள்ளத்தில் மூழ்கடித்து, கேரள மாநிலத்திற்கு மின்சாரம் மற்றும் வேலைகளை வழங்குவதற்காக ஒரு நீர்மின் நிலையத்தை உருவாக்க திட்டமிட்டது. அதனை தடுத்து நிறுத்தி, காடுகளையும், பல்லுயிர் பெருக்கத்தையும் காப்பாற்றிய பெருமை ஜானகியால் உருவாக்கப்பட்ட மக்கள் அறிவியல் இயக்கத்தையே சாரும்.
நாடு முழுக்க பயணித்து இயற்கையை காப்பாற்றி புதியவகை ஆய்வுகளின் மூலம் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய ஜானகி அம்மாளுக்கு 1977-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கவுரவித்தது அரசு.
பணி ஓய்விற்குப் பின்னும் சென்னை மதுரவாயலில் ஆராய்ச்சி பணியாற்றிக் கொண்டிருந்த போதே ஜானகி எனும் அந்த இயற்கையின் தேவதை பிப்ரவரி 7, 1984-ல் இயற்கையோடு கலந்தார்.
தொடர்புக்கு,
ruckki70@yahoo.co.in