சிறப்புக் கட்டுரைகள்
null

சர்வமும் சக்தி மயம்- மக்களை குளிர்விக்கும் மாரியம்மன் அருள்

Published On 2022-10-28 10:02 GMT   |   Update On 2022-10-28 10:34 GMT
  • மணப்பேறும் மகப்பேறும் தருபவளாக, நோய்களைப் போக்குபவளாக மாரியம்மன் வணங்கப்படுகிறாள்.
  • சக்தி வடிவமான ரேணுகை நெருப்பில் வேகலாமா? பதறிப்போன இந்திரன், உடனடியாக மழையைப் பொழிவித்தான்.

இயற்கையைத் தாயாகப் போற்றி வழிபடுகிற தமிழ்நாட்டு மரபில், பெருந்தெய்வமாக ஓங்கி நிற்பவள் மாரியாத்தாள். மாரியம்மன், மாரியாயி, மாரி என்று பலவிதமாக அழைக்கப்படுகிற மாரியாத்தாளை, கிராமத்துக்கு கிராமம் காணலாம். வேப்பமரத்தடிகளில் குடி கொண்டவளாக, புற்றடி மண்ணில் கோவில் கொண்டவளாக, நாகத்தால் குடைபிடிக்கப்பட்டவளாக, மணப்பேறும் மகப்பேறும் தருபவளாக, நோய்களைப் போக்குபவளாக மாரியம்மன் வணங்கப்படுகிறாள்.

மாரியம்மன் என்னும் திருநாமம், எவ்வாறு ஏற்பட்டது? மாரி என்றால் மழை. மழையையும் அதனால் தோன்றும் குளிர்ச்சியையும் வளமையையும் பெண்ணாக உருவகப்படுத்திய பண்டையத் தமிழர், இந்தப் பெண்ணையே தாயாகவும் வழிபட்டனர். மழை + தாய் என்னும் பொருளில், மாரியம்மா என்றும் அழைக்கலாயினர். அநேகமாக எல்லா கிராமங்களிலும் கிராம தேவதையாக மாரியாத்தாள் விளங்குவதற்கும் சுவாரசியமான காரணமும் கதையும் உண்டு. வர்மராஜன் என்பவரின் மகள் ரேணுகை. ஜமதக்னி என்னும் ரிஷியை மணந்தாள். கார்த்தவீரியன் என்னும் கொடியவனின் புதல்வர்கள், ஜமதக்னியைக் கொன்றனர். கணவர் இறந்ததைக் கண்ட ரேணுகை, தானும் நெருப்பில் பாய்ந்தாள். சக்தி வடிவமான ரேணுகை நெருப்பில் வேகலாமா? பதறிப்போன இந்திரன், உடனடியாக மழையைப் பொழிவித்தான். நெருப்பு அணைந்தது. ஆனாலும், ரேணுகையின் ஆடை முழுவதும் எரிந்துபோய், உடலெங்கும் கொப்புளங்கள் கிளம்பின.

அருகிலிருந்த வேப்பமர இலைகளையே தனக்கு ஆடையாக்கிக் கொண்டாள். அருகே இருந்த மக்கள் குடியிருப்பை அடைந்து அவர்களோடு தங்கினாள். பசிக்கு உணவு கேட்டவளின் நிலைமையைக் கண்ட மக்கள், அரிசியும் வெல்லமும் மாவும் தந்தனர். குளிர்ச்சியைத் தருவதற்காக இளநீரும் பானகமும் கொடுத்தனர். இன்னும் சிலர், ஆடை தந்தனர். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாள். பின்னர், ஜமதக்னியைத் தேடி வானுலகம் சென்றாள். இருவரையும் தேவர்கள் சமாதானப்படுத்தினர்.

திருக்கைலாயம் சென்று சிவனாரை வணங்கினர். ரேணுகையானவள், சக்தியின் அம்சம் என்பதால், மீண்டும் பூமிக்கே சென்று, மக்கள் கூடுமிடங்களில் தங்கியிருந்து, தீமைகளைப் போக்கும்படிக் கட்டளையிட்டார். நெருப்பால் இவளின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் போன்றே, தீய வெப்பத்தால் மக்களின் உடல்களில் தோன்றும் அம்மைக் கொப்புளங்கள், ரேணுகையின் அருளால் அமிழும் என்றும், இவள் தரித்த வேப்பிலையே நோய்த்தீமைகளை அகற்றும் அருமருந்தாகும் என்றும் கூறினார். இவளுக்குக் கொடுக்கப்பட்ட உணவே இவளுக்கு உகப்பான நிவேதனமாகும் என்றும், இவளருளால் மழை பொழிந்ததால், இவளுக்கு மாரி என்னும் திருநாமம் நிலைக்கும் என்றும் வரங்கள் அருளினார்.

சிவபெருமான் தந்த வரங்களைப் பெற்றுக்கொண்டு பூவுலகம் வந்த ரேணுகை, மக்கள் கூடுமிடங்களிலும் வசிப்பிடங்களிலும் மாரியம்மனாகத் தங்குகிறாள். மரத்தடிகளிலேயே விரும்பி வாசம் செய்கிறாள். கொப்புளங்களைத் தனது திருமேனியில் தாங்கிக்கொண்டு, நம்முடைய கொப்புளங்களைப் போக்குகிறாள். இதனாலேயே 'முத்துமாரி' என்னும் திருநாமமும் கொள்கிறாள்.

அழகான இளம்பெண், செந்நிற மேனியாள், செந்நிற ஆடைக்காரி, இருந்தாலும், வேப்பிலைத் தழைகளைக் கொத்துக் கொத்தாக அணிவதில் ஆர்வம் மிக்கவள்.

இவளுக்கு இரண்டு அல்லது நான்கு திருக்கரங்கள். அபயம், வரம், பாசம், அங்குசம் ஏந்தியிருப்பாள். எண்ணற்ற ஆற்றலுடையவள் என்பதை விளக்குவதற்காக, சில சமயங்களில் எட்டு அல்லது பத்துக்கும் மேற்பட்ட கரங்களையும் கொண்டிருக்கக்கூடும்.

எப்போதும் திரிசூலம் ஏந்தியிருக்கும் இவளுக்கு, இதுவே மிகவும் பிடித்தமான ஆயுதம், எனவே, திரிசூலி என்றே பெயர் பூணுகிறாள்.

சில தலங்களில், மாரியம்மன் தலை மாத்திரமே காணப்படும். இது ஏன்?

ரேணுகையின் கதையில் சில வேறுபாடுகள் ஆங்காங்கே உண்டு. ரேணுகைக்கும் ஜமதக்னிக்கும் தன்னுலன், அனுலன், விச்வாவசு, பரசுராமன் ஆகிய நான்கு மகன்கள். ஒருநாள் கங்கையில் நீராடிவிட்டு, குடத்தில் நீர் முகந்தாள். தண்ணீர்ப் பரப்பில் ஏதோ நிழலாடியது. வானவீதியில் சித்திரசேனன் என்னும் கந்தர்வன் சென்று கொண்டிருந்தான். 'இவன் எவ்வளவு அழகு' என்று எண்ணினாள். நீர் முகக்க வரவில்லை, குடமும் குலைந்து போனது.

இதற்கிடையில், ஞான திருஷ்டியில் நடந்ததைக் கண்டுவிட்ட ஜமதக்னி, பிற ஆடவனின் அழகில் மயங்கிய தாயைக் கொல்லும்படி மகன்களுக்குக் கட்டளையிட்டார். மற்ற பிள்ளைகள் ஒதுங்கிக்கொள்ள, கடைசி மகனான பரசுராமன் தந்தையின் ஆணையை மீறமாட்டாமல், அன்னையை அழித்தார். இருந்தாலும், தாயல்லவா? தவிப்போடு தந்தையை அணுகினார். மகனின் உறுதியை மெச்சிய தந்தை, ஏதேனும் வரம் கேட்கச் சொன்னார். விடுவாரா மகன்? தாயை எழுப்பித் தரவேணுமெனத் தந்தையை வேண்ட, ரேணுகையை எழுப்புவதற்கான மந்திர நீரைத் தந்தை கொடுக்க, ஓடோடி சென்று தாயின் தலையை எடுத்தார் பரசுராமன். தலை கிடைத்தது. உடலைத் தேடினார். வேறு பல பெண்களின் உடல்களோடு அன்னையின் உடல் கலந்துவிட்டிருந்தது. ஏதோவொரு உடலை எடுத்து அன்னையின் சிரசை ஒட்ட வைத்தார்.

மாற்று உடலோடு ஜமதக்னியின் முன்னர் நின்றாள் ரேணுகை. இவளின் சக்தி அம்சம் உலகைப் பேண வேண்டும் என்னும் விருப்பம் கொண்ட முனிவர், அப்படியே கிராமங்களில் குடியேறச் சொன்னார். நோய் தீர்ப்பவளாகவும் நன்மை தருபவளாகவும் இவளும் நிலைபெற்றாள்.

தலை மாத்திரமே ரேணுகை என்பதால், சில தலங்களில் அம்பிகையின் தலை மாத்திரம் பிரதிஷ்டை செய்து வழிபடப்படுகிறது. தலையும் உடலும் மாறிப் போய்விட்டன என்பதால் 'மாறியம்மன்' என்பார்கள். எனினும், மாரியம்மன் என்பதே சரி.

இப்படியெல்லாம் வெவ்வேறு வடிவங்கள், வெவ்வேறு உருவங்கள் என்றெல்லாம் அம்பிகைக்கு உண்டா?

உண்டு, கண்டிப்பாக உண்டு. அனைத்து வடிவங்களும் அனைத்து உருவங்களும் அனைத்து வண்ணங்களும் இவளே! ஒவ்வொரு வடிவமெடுக்கும்போதும், ஒவ்வொரு வகையான வண்ணத்தை ஏந்திக் கொள்கிறாள். தேவி புராணம் அம்பிகையின் இப்படிப்பட்ட வண்ணமய வடிவங்களைத் தெளிவாக விவரிக்கும்.

காளியாக இருக்கும்போது, கருநிறமானவள்;

நீலசரஸ்வதியாக, நீலவண்ணம் கொள்கிறாள்; மொழிகள் அனைத்தையும் ஆள்கிறாள்.

தாராதேவியாக, வெண்மை தாங்குகிறாள், பிறவிக் கடலில் இருந்து கரைத்தேற்றுகிறாள்.

சியாமா என்று வடிவம் கொள்ளும்போது, கரும்பச்சை நிறத்தவள்.

ஷோடசீ ஆகவும் புவனேஸ்வரீ ஆகவும் திகழ்கையில், பால அர்க்க காந்தியோடு, உதயகாலச் சூரியன் போல் பிரகாசிப்பவள்.

தூமவதீ என்னும் நிலையில், சாம்பல் வண்ணம் ஏற்கிறாள்;

பகளாமுகீ ஆக மஞ்சள் நிறத்தவள். கமலா என்று மின்னல் வடிவம் கொள்கிறாள். இத்தனை இத்தனை வண்ணங்களும் வடிவங்களும் கொள்வதற்கு என்ன காரணம்? அனைத்தும் இவளே என்பதைப் பலவிதமாக வெளிப்படுத்துகிறாள்.

இது மட்டுமில்லை, எப்போதெல்லாம் பூமியில் தீமை அதிகப்படுகிறதோ, அப்போதெல்லாம் ஏதேனும் வடிவம் கொண்டு தீமையை நீக்கி, நன்மையைக் கூட்டுவிக்க அருள்பாவித்துவிடுகிறாள். யதா யதா பாதா பவிஷ்யதி, ததா ததா அவதீர்யாஹம் கரிஷ்யாம்யரிஸம்கஷயம் என்றே அருள்கிறாள். அதாவது, எப்போதெல்லாம் தீமையும் துயரமும் வருகின்றனவோ, அப்போதெல்லாம் அவதரித்து வந்து அதருமத்தை அழிப்பாள். இயற்கையில் அனைத்துமே அம்பிகை என்பதை உணர்ந்துவிட்டால், அருகிலேயே இருந்து பாதுகாப்பாள்.

தொடர்புக்கு,

sesh2525@gmail.

Tags:    

Similar News