சிறப்புக் கட்டுரைகள்

தீய சக்திகளை விரட்டும் மேல்மலையனூர் அம்மன்

Published On 2023-07-19 10:07 GMT   |   Update On 2023-07-19 10:07 GMT
  • தேவி தன் சாபம் நீங்க, வயதான கோலத்தில் கந்தல் ஆடையுடன் ஒவ்வொரு இடமாகச் சுற்றி திருவண்ணாமலைக்கு வருகிறார்.
  • தீமையை அழிக்க ஆக்ரோஷமாக உருவம் எடுத்தாலும், அன்னை கருணையே வடிவானவள்.

மனிதர்களுக்கு மட்டும்தான் சாபமா எனில் இல்லை. நியாயத்தின் முன் அனைவரும் சமம் என்று நிரூபிக்க பரம்பொருளும் சில சாபங்களை ஏற்கிறது. ஆணவம் கூடாது என்பதே அதற்கான அடிப்படை காரணமாக இருக்கிறது. அதேபோல்தான் சரஸ்வதியின் சாபம் காரணமாக பார்வதியும், ஈசனும் அது விலக வழி தேடி அலைகிறார்கள். மகாவிஷ்ணுவிடம் அன்னை சாபவிமோசனத்திற்கு வழி கேட்க பகவான் கூறுகிறார். "ஈசனின் சாபம் விலக வழி உண்டு"- கருணையோடு மகாவிஷ்ணு.

அன்னை தன் இருகை கூப்பி வேண்டுதலோடு கேட்டார். "சொல்லுங்கள் அண்ணா, ஈசனின் சாபம் நீங்கி அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு வர என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்" என்கிறார்.

"தேவி, ஈசன் இங்கு வரும்போது அவரை மயானத்தில் தங்க வைத்துவிடு. பின் நவதான்யத்தால் செய்யப்பட்ட சுண்டல், கொழுக்கட்டை ஆகியவற்றை ஒன்றாகப் பிசைந்து மூன்று உருண்டைகள் செய்து முதல் கவளத்தை ஈசன் கையில் உள்ள திருவோட்டில் போடு. அதை பிரம்மாவின் தலை தின்று விடும். அடுத்த கவளத்தையும் அதேபோல் போடு. அதையும் தின்று விடும். மூன்றாவது கவளத்தை திருவோட்டில் போடுவதுபோல் கீழே போட்டுவிடு.

உணவின் சுவையால் ஈர்க்கப்பட்ட பிரம்மாவின் தலை ஈசனின் கையைவிட்டு இறங்கி உணவை உண்ண ஆரம்பிக்கும். அப்போது நீ ஆக்ரோஷ வடிவெடுத்து அந்த தலையை மிதித்து அழித்து விடு என்று கூறுகிறார். அன்னை அதேபோல் செய்ய ஈசனின் சாபம் நீங்குகிறது.

நான்கு யுகங்கள் என்று கூறுகிறார்கள். கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதற்கு முன் மணியுகம் என்று ஒரு யுகம் இருந்தது. அதில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. அதில் கர்வம் கொண்ட பிரம்மா, ஈசனுக்கு சமமான அதிகாரம் படைத்தவர் நானும் தான்னறு ஆணவம் அதிகரிக்கிறது.

இறைவனையும் பாதித்த சாபம்:

ஒருமுறை பார்வதி தேவி பிரம்மாவை தொலைவில் இருந்து பார்த்து ஈசன் என்று நினைத்து வணங்கிக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த பிரம்மா, "சகலமும் அறிந்த தேவிக்குத் தன் கணவர் யார் என்று தெரியவில்லையோ?" என்று ஏளனமாகக் கூற கோபம் கொண்ட ஈசன் பிரம்மாவின் ஒரு தலையைத் துண்டித்து விட்டார். இதில் கோபம் கொண்ட சரஸ்வதி இதற்குக் காரணம் பார்வதியே என்று "ராணியாக வாழ்ந்த நீ உன் அழகை இழந்து, வயதான கிழவியாய், கந்தல் ஆடையை அணிந்து புற்றில்தான் வாசம் செய்வாய்" என்று சாபமிட்டு விடுகிறார். பிரம்மாவின் சாபப்படி அவரின் தலையும் ஈசன் கையில் ஒட்டிக் கொள்கிறது. பித்தனாக அலைகிறார் ஈசன்.

தேவி தன் சாபம் நீங்க, வயதான கோலத்தில் கந்தல் ஆடையுடன் ஒவ்வொரு இடமாகச் சுற்றி திருவண்ணாமலைக்கு வருகிறார். இரவு ஆகி விடவே தாயனூர் என்ற ஊரில் ஏரிக்கரை அருகே தங்கி விடுகிறார். மறுநாள் அந்த ஏரியில் குளித்து எழும்போது அவரின் வயதான தோற்றம் மாறுகிறது. அங்கிருந்து மலையரசன் பட்டினம் என்ற மேல்மலையனூருக்கு வருகிறார். அரசனின் நந்தவனத்தில் புற்று உருவில் அன்னை பார்வதி தியானம் செய்கிறார். அந்தப் புற்றுக்கு மீனவர்கள் மஞ்சள் குங்குமம் சாற்றி, தீபமேற்றி வணங்கி வரும் விஷயம் மலையரசனுக்கு தெரிய வருகிறது. தன் தோட்டத்தில் உள்ள அந்தப் புற்றை இடித்து அப்புறப்படுத்துமாறு கூறுகிறார். மீனவர்கள் எத்தனையோ தடுத்தும் கேளாமல் புற்றை இடிக்க, பூத கணங்கள் தோன்றி அங்கிருந்தவர்களை விரட்டி விடுகிறார்கள். உண்மை தெரிந்த மன்னன் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்கிறான். அன்னை பூங்காவனத்து அம்மனாகத் தோன்றி ஈசனின் சாபத்தைப் போக்கவே நான் இங்கு வந்துள்ளேன். இங்கு என்னை நாடி வருபவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருவேன் என்று வரம் அளிக்கிறார்.

மகாவிஷ்ணுவின் சொல்படி ஈசன் அன்னையிடம் வந்து பிச்சை கேட்கிறார். அன்னையும் மகாவிஷ்ணு சொன்னபடி உணவை இட, கீழே விழுந்த உணவை உண்ண பிரம்மாவின் தலை ஈசனின் கையை விட்டு விலகி குனிகிறது. அன்னை ஆக்ரோஷமாக தலையைக் காலால் மிதித்து அழித்து விட ஈசனின் சாபம் நீங்குகிறது.

இறைவனின் தோஷம் நீங்கியதால் அவர் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். சிதம்பரம் சென்று படிக லிங்கமாக மாறி விடுகிறார். ஈஸ்வரனுக்கு தாண்டவேஸ்வரர் என்றும் அம்பாளுக்கு அங்காளம்மன், ஆனந்தாயி என்றும் பெயர் வழங்குகிறது.

கருணை வடிவான அங்காளம்மன்

தீமையை அழிக்க ஆக்ரோஷமாக உருவம் எடுத்தாலும், அன்னை கருணையே வடிவானவள். இமவான் மகளாக இருந்தவள் தன் கணவனைக் காப்பாற்ற அங்காளம்மனாக உருவெடுத்தார். மேல்மலையனூரில் அம்மன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றி இருக்கிறார். தன் கணவனைப் பிரிந்து அவரைக் காப்பாற்ற அன்னை வந்து இங்கு குடி கொண்டதால் இங்கு கணவனைப் பிரிந்தவர்கள் வந்து அம்மனிடம் பிரார்த்தனை செய்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். தட்சன் தன் கணவனை அழைக்காமல் யாகம் செய்ததால் கோபம் அடைந்த தாட்சாயணி, அந்த யாக குண்டத்தில் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்டார். அந்த உருவமற்ற அம்சமே அங்காளி ஆகும். அங்காளியைத் தன் தோளில் சுமந்து ஆவேசமாக நடனமாடினார் ஈசன். அப்போது அம்பிகையின் கை துண்டாகி கீழே விழுந்தது. அது தண்டகாருண்யம் என்ற சக்தி பீடமாகியது. அதில் ஒரு பகுதியே மேல்மலையனூர். அம்பிகை யாகத்தில் சாம்பலான இடம் என்பதால் இங்கு சாம்பலே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அம்பிகையின் அருட் திருவருள் கடலெனப் பரந்தது என்றாலும், தன்னை நம்பி வரும் அடியவரின் துயர் நீக்கும் தன்மையே பெரிதாகப் போற்றப்படுகிறது. அம்பிகையின் சக்தியாலேயே இவ்வுலகம் இயங்கினாலும் அனைத்துப் பெருமைகளையும் இறைவனுக்கு அளித்து விட்டு அமைதியாகப் புன்னகை பூக்கிறாள் அம்பாள்.

மயானக் கொள்ளை:

மயானக் கொள்ளை என்னும் நிகழ்ச்சி இங்கு மிகப் பிரசித்தம். மயானத்தில் ஈசனின் கபாலத் திருவோட்டில் உணவு இட்டு பிரம்மனின் தலையை அழித்த நிகழ்ச்சி மயானக் கொள்ளை என்று கொண்டாடப் படுகிறது. புற்றில் இருந்த அம்மனைக் கொண்டாடிய மீனவக் பரம்பரையினரே இன்று வரை பூஜை செய்து வருகின்றனர். அம்மன் புற்று மண்ணால் சுயம்புவாக உருவாகியவள். நான்கு திருக்கரங்களுடன், இடதுகாலை மடித்து வலதுகாலைத் தொங்க விட்டபடி பிரம்ம கபாலத்தைக் காலில் மிதித்தபடி வடக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறாள். அம்பிகைக்கு புற்று தேவி, தண்டேஸ்வரி என்ற பெயர்களும் வழங்கப்படுகிறது.

கோவிலுக்குத் தெற்கே பெரிய உருவமாக மல்லாந்து படுத்த நிலையில் பெரியாயி காட்சி அளிக்கிறாள். அவளை வழிபடுபவர்களுக்கு தீய சக்திகள் தொல்லை தராது. இங்குள்ள நூற்றி எட்டு விநாயகர்களை தரிசித்தால் வாழ்வில் சகல நன்மைகளும் கிடைக்கும்.

தல விருட்சமாக வில்வ மரம் திகழ்கிறது. பிரம்ம கபாலத்தை அழித்த பிறகு அன்னை திருவண்ணாமலை சென்று தீர்த்தத்தில் மூழ்கி சாப விமோசனம் பெற்றாள் என்கிறார்கள். எனவே திருவண்ணாமலை சென்று விட்டு இங்கு வந்து அம்மனை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்கிறார்கள்.

ஜி.ஏ.பிரபா

 வழிபாடு முறைகள்:

அங்காளம்மனை வழிபட்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற, வேப்பஞ்சேலை அணிந்து, கோவிலை வலம் வருகிறார்கள். பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் இந்த வழிபாடு உண்டு. அதை இப்போது பக்தர்கள் இங்கும் பின்பற்றுகிறார்கள். ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை இங்கு வந்து பொங்கல் வைக்கிறார்கள். பொங்கல் பானையின் மேல் மூடியில் பச்சரிசி மாவிளக்குப் போட்டு நெய் தீபம் ஏற்றி சன்னதிக்குள் எடுத்துச் செல்வார்கள். ஆடி மாதம் முழுவதும் இந்த வைபவம் உண்டு. பால் அபிஷேகம், வஸ்திரம் சாற்றுதல், மாவிளக்கு போடுதல், நெய் தீபம் ஏற்றுதல் என்று அம்பிகைக்கு உரிய அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகிறது.

சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், பிரிந்த கணவன், மனைவி இணைய, குழந்தைப்பேறு, திருமணம் என பல தடைகள் அம்மனை வழிபடுவதால் விலகும் என்கிறார்கள். மயானக் கொள்ளை முடிந்த பிறகு சாம்பலே பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. அதை வீட்டில் கொண்டு வந்து வைத்தால் தீய சக்திகள் நெருங்காது என்று நம்புகிறார்கள் பக்தர்கள். தன்னை நம்புபவர்கள் மட்டுமல்லாமல் அல்லலில் உள்ள அன்பர்களையும் தன்னிடம் ஈர்க்கும் வல்லமை பெற்றவள் மேல்மலையனூர் அம்மன்.

திருவிழாக்கள்:

மயானக் கொள்ளை, நவராத்திரி, கார்த்திகைத் தீபம், தைப் பொங்கல், தேர்த்திருவிழா. இதில் கலந்து கொண்டால் ராகு-கேது தோஷங்கள் விலகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது பக்தர்களிடம்.

நேர்த்தி: எலுமிச்சம்பழ மாலை, வஸ்திரம் சாற்றுதல், நெய் விளக்கு ஏற்றுதல்

இருப்பிடம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர்.

தொடர்புக்கு:

gaprabha1963@gmail.com

Tags:    

Similar News