சிறப்புக் கட்டுரைகள்

சோலையம்மா... மீனாதான்... ராஜ்கிரண் பிடிவாதம்

Published On 2023-09-25 11:07 GMT   |   Update On 2023-09-25 11:07 GMT
  • முதல் படம் ‘ஒரு புதிய கதை’ எதிர்பார்த்த வெற்றியடையவில்லை.
  • காட்சி நன்றாக வந்திருப்பதாகவும் டயலாக்கை அழகாக பேசியதாகவும் கஸ்தூரி ராஜா சார் சிரித்துக் கொண்டே கூறினார்.

குயில் பாட்டு...

ஓ வந்ததென்ன

இளமானே...

அதைகேட்டு

ஓ செல்வதெங்கே

மனம் தானே...

-மனதை மயக்கும் இந்த பாடலை மறக்க முடியுமா?

மஞ்சள் வண்ணத்தில் தாவணி போட்ட பெண்ணாக பசுமையான மரம், செடி, கொடிகளுக்கிடையே துள்ளிக்குதித்து ஆடிபாடி வருவேனே... மறந்திருக்க மாட்டீர்கள்!

என் ராசாவின் மனசிலே...

இந்த படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ஆம் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்று நினைத்து கொண்டிருக்கையில் ஒரு நாள் படக்குழுவில் இருந்து வீட்டுக்கு வந்தார்கள். கஸ்தூரிராஜா சார் வரச் சொல்லி இருப்பதாக கூறினார்கள்.

அவரை சந்தித்ததும் தேர்வு செய்திருப்பதாக கூறினார். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதே நேரம் மனசுக்குள் ஒருவித பயம். முதல் படம் 'ஒரு புதிய கதை' எதிர்பார்த்த வெற்றியடையவில்லை. இந்த படமாவது 'ஹிட்' ஆக வேண்டும் கடவுளே என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டேன்.

சோலையம்மா...

இதுதான் நான் ஏற்று நடித்த கதாபாத்திரம். முதல் நாள் ஷூட்டிங். திண்டுக்கல் பக்கம் படப்பிடிப்பு. முதல் முதலில் வீட்டில் என்னை சந்தித்த போது என்ன டயலாக்கை கொடுத்து பேச சொன்னாரோ அதே டயலாக்கை பேசியபடிதான் முதல் நாள் முதல் காட்சி படமாக்கப்பட்டது.

காட்சி நன்றாக வந்திருப்பதாகவும் டயலாக்கை அழகாக பேசியதாகவும் கஸ்தூரி ராஜா சார் சிரித்துக் கொண்டே கூறினார். அதை கேட்டதும் மனதுக்குள் ஒரு சந்தோஷம்.

2-வது நாள் ஷூட்டிங்குக்குதான் ஹீரோ ராஜ்கிரண் வந்தார். எனக்கு ஜோடியான அவரை பார்த்ததும் ஜோடி பொருத்தம் எப்படி அமையும்...? என்று மனதுக்குள் நினைத்தேன்.

படத்தின் கதைப்படி ஹீரோ முரட்டுக் குணம் உடையவர். ஹீரோயின் அப்பாவி பெண். இந்த பாத்திரத்துக்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன் என்பதில் ராஜ்கிரண்தான் உறுதியாக இருந்திருக்கிறார் என்பதை சுமார் 25 வருடங்களுக்கு பிறகு மீனா-40 நிகழ்ச்சியின் போது அவரே சொன்னதை கேட்டு ஆச்சரியப்பட்டேன்.

சினிமா உலகில் தயாரிப்பாளராக இருந்து நடிக்க வந்தவர் ராஜ்கிரண். 'என் ராசாவின் மனசிலே' படம்தான் அவருக்கும் முதல் படம். படத்தின் கதை தயாரானதும் சோலையம்மா பாத்திரத்துக்கு ஹீரோயின் தேடியிருக்கிறார்கள்.

அப்போது ஒரு வார இதழில் எனது புகைப்படத்தை ராஜ்கிரண் பார்த்திருக்கிறார். தனது சோலையம்மா பாத்திரத்துக்கு இவர்தான் ஏற்றவர் என்று கருதி கஸ்தூரிராஜா சாரிடம் போய் சொல்லி அந்த பெண்ணை தேடி பிடித்து ஒப்பந்தம் போடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் கஸ்தூரிராஜா சார் ஒத்துக் கொள்ளவில்லை. மிகவும் சின்ன பெண்ணாக இருக்கிறார். உங்களுக்கு பொருத்தமாக இருக்கமாட்டார் என்று மறுத்து இருக்கிறார். ஆனால் ராஜ்கிரண் 'சின்ன பெண்ணாக இருந்தாலும் சோலையம்மா கேரக்டருக்கு அவர்தான் வேணும். போங்க என்று அனுப்பி இருக்கிறார். அப்படித்தான் என்னை தேடி வந்திருக்கிறார்கள்.

நிஜமாகவும் நான் ராஜ்கிரணை பார்த்து பயந்தது உண்மை. படத்தில் பாத்திரத்துக்கு ஏற்ப நடித்தேனே தவிர அவரிடம் பேசியது கூட கிடையாது. அம்மாதான் எனக்கு தைரியம் சொல்லி உருவத்தை வைத்து எடை போடாதே. அவரும் நல்ல மனிதர்தான் என்பார். உண்மையிலும் அவர் அப்படித்தான். பார்்க்க அப்படி இருப்பார். ஆனால் ரொம்ப சாப்டானவர்.

அப்போதெல்லாம் இந்த காலகட்டத்தை போல் நவீன வசதிகள் கிடையாது. ஒரு பாடலை ஒரே நாளில் படமாக்க வேண்டும். ஒரு பாடலுக்கு நான்கைந்து காஸ்ட்யூம் இருக்கும். ஆனால் உடைமாற்றுவதற்கு ஏற்ற வகையில் இந்த காலகட்டத்தை போல் 'கேரவன்' வசதியெல்லாம் கிடையாது.

எங்காவது ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு நடக்கும். உடை மாற்றுவதற்காக தங்கி இருக்கும் இடங்களுக்கு சென்றுவிட்டு வரமுடியாது. காரை நிறுத்திவிட்டு கார் மறைவிலோ, மரங்களின் மறைவிலோ நின்று அவசர அவசரமாக உடைகளை மாற்றிக் கொண்டு ஷூட்டிங்க்கு ஓடுவேன்.

சோலையம்மா கேரக்டருக்கு பெரிய அளவில் மேக்-அப் எதுவும் கிடையாது. கிராமத்து அப்பாவி பெண்ணாகவே நடிக்க வேண்டும். அந்த படத்தில் ஸ்ரீவித்யா எனக்கு பாட்டி. அடிக்கடி அவருக்கு பின்னால் ஒளிந்து நின்றபடிதான் பேச வேண்டும்.

இதனாலேயே அவர் அடிக்கடி என்னை பார்த்து "என்ன... பூனைக்குட்டி எப்படி இருக்கே" என்று செல்லமாக அப்படியே கேட்பார்.

அந்த படத்தில் நடித்ததே வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. முரட்டு குணம் கொண்டவராக நடித்த ராஜ்கிரண் காட்சியிலும் பார்க்கும் போது அச்சு அசலாக இருப்பார்.

ஒரு காட்சியில் அவருக்கு சோறும், கறிக்குழம்பும் கொடுக்கும் போது நல்லி எலும்போ... சூப்பு எலும்போ எதுவாக இருந்தாலும் அள்ளிபோடு. மென்று கடிச்சு புடுறேன் என்றபடி ஆட்டிறைச்சி எலும்பை எடுத்து கடிப்பார். நீண்ட நேரமாக அதை கடித்து கொண்டே இருப்பார். நாங்கள் ஆச்சரியமாக பார்ப்போம். காரணம் அவர் கதையில் ஒன்றி விடுவதுதான்.

சின்ன வயசு. ஆனால் ஹெவி கேரக்டர். இருந்தாலும் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்தேன். சோலையம்மா பாத்திரம் ரசிகர்களின் மனதில் நிற்கும்படி என் முழு திறமையையும் செலுத்தி நடித்தேன். அடுத்த வாரமும் சோலையம்மாவாக இன்னும் சில முக்கியமான மறக்க முடியாத சம்பவங்களுடன் உங்களை சந்திக்க வருகிறேன்...

(தொடரும்...)

Tags:    

Similar News