சிறப்புக் கட்டுரைகள்

களத்திர தோஷமா? கவலை வேண்டாம்

Published On 2024-01-09 17:45 IST   |   Update On 2024-01-09 17:45:00 IST
  • களத்திர தோஷம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
  • கணவன்-மனைவி இருவருக்கும் தோஷம் இருந்தால் அது சமமான நிலையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒவ்வொரு கிரகமும் ஒருவரது ஜாதக அமைப்பில் இருக்கும் இடத்துக்கு ஏற்ப நல்லது-கெட்டதுகளை செய்யும். குறிப்பாக சூரியன், செவ்வாய், ராகு, கேது கிரகங்கள் பாவ கிரகங்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த கிரகங்கள் ஜாதக கட்டங்களில் சரியான இடத்தில் அமையாவிட்டால் தீங்கு விளைவித்து விடும் என்பார்கள்.

இந்த கிரகங்கள் ஜாதக கட்டத்தில் லக்னம் 2, 4, 7, 8 மற்றும் 12-ம் இடங்களில் இருக்கும்போது மற்ற கிரக அமைப்புகளின் நிலையும் சுமாராக இருந்தால் அது தோஷத்தை ஏற்படுத்தி விடும். அதிலும் 7-வது வீட்டை தீங்கு விளைவிக்கும் ஒரு கிரகம் தாக்கினால் ஜோதிடர்கள் அதை கண்ணை மூடிக்கொண்டு களத்திர தோஷம் என்று சொல்லி விடுவார்கள்.

மேலும் இந்த மோசமான கிரகங்கள் சேர்ந்து அமைந்து விட்டால் களத்திர தோஷத்தின் பாதிப்பு சற்று அதிகமாக இருப்பதாக பயம் காட்டுவார்கள். இதனால் அடிக்கடி சோதனை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும் என்றும் சொல்வது உண்டு.

களத்திர தோஷம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமானது முன் ஜென்மத்தில் ஏதாவது பாவங்கள், தவறுகள் செய்திருந்தால் அவை களத்திர தோஷமாக மாறி இந்த ஜென்மத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தோஷம் பாதித்தவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும்.

சிலருக்கு களத்திர தோஷம் வலுவாக இருந்தால் அவருக்கு திருமணம் நடைபெறாமல் போவதற்கான வாய்ப்புகளும் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான களத்திர தோஷம் உடையவர்களுக்கு பரிகாரங்கள் செய்து திருமணத்தை நடத்தி வைத்து விடுவார்கள்.

ஆனால் திருமணத்துக்கு பிறகு களத்திர தோஷம் தனது வேலையை காட்டிக் கொண்டே இருக்கும் என்று ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதாவது களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் திருமணத்துக்கு பிறகு மனைவியிடம் தொடர்ந்து சண்டையிட்டு கொண்டே இருப்பார் என்பார்கள். கணவன்-மனைவி உறவில் ஒற்றுமை குறைந்தே காணப்படும்.

இந்த நிலை வரக் கூடாது என்பதற்காகத்தான் களத்திர தோஷம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணம் செய்து வைப்பார்கள். கணவன்-மனைவி இருவருக்கும் தோஷம் இருந்தால் அது சமமான நிலையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

களத்திர தோஷம் இருப்பவர்கள் அதில் இருந்து விடுபட எத்தனையோ பரிகார பூஜைகள் உள்ளன. அதில் முதன்மையானது குல தெய்வ வழிபாடுதான். ஒருவர் எந்த அளவுக்கு குல தெய்வத்தை மனதில் நினைத்து வழிபாடுகள் செய்கிறாரோ அந்த அளவுக்கு இந்த தோஷத்தில் இருந்து மீண்டு வர முடியும்.

ஆலயங்களுக்கு சென்று வழிபட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் சுக்கிர பகவான் ஆதிக்கம் பெற்ற ஆலயங்களுக்கு செல்ல வேண்டும். தமிழகத்தில் சுக்கிர பகவான் ஆதிக்கம் பெற்ற ஆலயங்களில் மிக சிறப்பான தலமாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம் கருதப்படுகிறது. அங்கு சென்று வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும்.

குறிப்பாக ஸ்ரீரங்கம் ஆலயத்தில் எத்தனையோ விதமான பூஜை வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அதில் எது சிறப்பான பரிகார பூஜையாக இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். ஸ்ரீரங்கம் ஆலயத்தில் சேர்த்தி சேவையை தொடர்ந்து வழிபட்டு வந்தால் திருமண தடைகள் விலகி கெட்டி மேளம் கொட்டும் பாக்கியம் கைகூடி வரும் என்பார்கள்.


மேலும் குரு ஆதிக்கம் நிறைந்த ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம். குரு பகவான் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தால் திருமண தடை நீங்குவதோடு செல்வ செழிப்பும் உண்டாகும். கும்பகோணம் பகுதியில் திருமண தடை நீக்கும் ஆலயங்கள் ஏராளமாக உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றான திருமணஞ்சேரி ஆலயம் சென்று வழிபடுவதால் கைமேல் பலன் கிடைக்கும்.

ஆலயங்களுக்கு செல்ல முடியாத பெண்கள் வீட்டில் சுமங்கலி பூஜை நடத்தி வருவது நல்லது. தொடர்ந்து சுமங்கலி பூஜை செய்து வந்தால் திருமண தாமதத்தை தவிர்க்கலாம். கணவன்-மனைவி ஒற்றுமை இல்லாத நிலை ஏற்பட்டாலும் சுமங்கலி பூஜை நடத்துவது நல்லது.

சுமங்கலி பூஜைக்கு மற்றொரு ஆற்றலும் உண்டு. கணவன்-மனைவி இடையே அன்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் சிறப்பு இந்த பூஜைக்கு இருக்கிறது. எனவே சுமங்கலி பூஜையை முறைபடி செய்தால் தாம்பத்திய வாழ்க்கை மேம்படும்.

சிலருக்கு திருமண வாழ்க்கை பற்றி நிறைய கனவுகள் இருக்கும். வரப்போகும் மனைவி அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்வார்கள். ஆனால் நடப்பது எதிர்ப்பார்ப்புகளுக்கு மாறாக வேறு மாதிரியாக இருக்கும். இதுவும் களத்திர தோஷத்தால்தான் ஏற்படுவதாக சொல்வதுண்டு.

ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனப்படும் 7-ம் இடத்து கிரகம் அமைவதை பொறுத்துதான் இவையெல்லாம் அமையும். திருமணத்தை நடத்தி கொடுப்பவராக சுக்கிரன் இருக்கிறார் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும். அவரது அமைப்பும் ஜாதகத்தில் முக்கியமானதாகும்.


7-ம் இடத்தில் சுக்கிரன் தனியாக இருந்தால் நல்லது அல்ல. அதுபோல 7-ம் இடத்தில் சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருப்பது நல்லது அல்ல. சனி இருந்தால் நிச்சயமாக தாமதத்தை ஏற்படுத்தும் என்பார்கள்.

இத்தகைய கிரக அமைப்பு இருப்பவர்களுக்கு இளம் வயதில் திருமணம் கைகூடி வருவதுண்டு. ஆனால் ஜாதகக்காரர் களத்திர தோஷம் காரணமாக ஏதாவது சொல்லி அந்த வாய்ப்பை தட்டிப் போக செய்து விடுவார். நல்ல வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்கிறேன். நல்ல சம்பளம் கிடைத்த பிறகு திருமணம் செய்கிறேன். சொந்த வீடு கட்டிய பிறகு திருமணம் செய்கிறேன் என்று சொல்வது எல்லாம் களத்திர தோஷத்தின் பாதிப்பு பிரதி பலிப்புதான்.

எனவே களத்திர தோஷம் இருப்பதாக கருதப்படுபவர்கள் இளம் வயதில் திருமணம் கைகூடி வந்தால் உடனே அதை ஆய்வு செய்து முடிவு எடுத்து விட வேண்டும். திருமணத்தை எந்த காரணத்தை கொண்டும் தாமதம் செய்யக் கூடாது. இல்லையெனில் 7-ம் இடத்து கிரகம் திருமணம் கைகூடுவதை தாமதப்படுத்திக் கொண்டே காலத்தை நீட்டித்து விடும்.

களத்திர தோஷத்துக்கு உரிய பரிகார பூஜை செய்யாவிட்டால் அது வாரிசுகளை கூட பாதிக்க தொடங்கி விடும். எனவே அவசியம் குருவின் ஆதிக்கம் நிறைந்த ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு களத்திர தோஷத்தை விரட்டி அடித்து விட வேண்டும்.

அப்படி செய்தால்தான் குரு பலன் ஏற்பட்டு திருமணம் கைகூடி வரும். அதன் தொடர்ச்சியாக நல்லது நடந்து வாழ்க்கையில் செழிப்பு உண்டாகும். எனவே களத்திர தோஷத்தை நினைத்து கவலைப்பட வேண்டியது இல்லை. மிக எளிதாக பரிகாரங்கள் மூலம் அவற்றை நிவர்த்தி செய்துவிட முடியும்.

தமிழகத்தில் குரு பலம் நிறைந்த ஆலயமாக ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் கருதப்படுகிறது. அங்கு சென்று வழிபட்டால் களத்திர தோஷம் விலகுவதை உணர முடியும். திட்டை குரு பகவான் ஆலயம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம் ஆலயம், திருச்சி உத்தமகோவில் ஆலயம் ஆகியவை குரு பலத்தை தந்து அருளும் ஆலயங்கள் ஆகும்.

சென்னையில் வசிப்பவர்கள் பாடி திரு வலிதாயம் ஆலயத்துக்கு சென்று வழிபட்டால் நல்லது. திருச்சி மணச்சநல்லூர் அருகே இருக்கும் திருப்பைஞ்ஞீலி ஆலயம் களத்திர தோஷத்தை போக்குகின்ற தலங்களில் மிக சிறப்பான தலமாக கருதப்படுகிறது. இந்த தலத்தில் உள்ள ஞீலிவனநாதரை உரிய பூஜைகள் செய்து வழிபட்டால் திருமண யோகம் கைகூடும் என்பது ஐதீகம். திருப்பட்டூரில் உள்ள பிரம்மா ஆலயமும் மிக சிறப்பான தலம் ஆகும். அங்கு வியாக்கிர பாதர், பதஞ்சலி முனிவர்களின் அருள் அலைகள் நிரம்பி உள்ளன. அங்கு வழிபட்டால் களத்திர தோஷம் உடனே விலகும். மேலும் திருப்பட்டூரில் பிரம்மாவும் நம் தலையெழுத்தை மாற்ற உதவி செய்வார்.

எனவே மேற்கண்ட தலங்களில் உங்களுக்கு எந்த தலம் வசதியாக உள்ளதோ அங்கு சென்று பரிகார பூஜைகள் செய்து களத்திர தோஷத்தில் இருந்து உடனே விடுதலை பெறுங்கள்.

Tags:    

Similar News