சிறப்புக் கட்டுரைகள்
null

எம்.எஸ்.வி.இசையை விரும்பிய எம்.ஜி.ஆர்.

Published On 2024-06-28 09:45 GMT   |   Update On 2024-06-28 09:45 GMT
  • 'குலேபகாவலி' என்றத் திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து எம்.எஸ்.வி மற்றும் டி.கே.ஆர். இசையமைத்தார்கள்.
  • "ஜெனோவா" படத்தில் இசையமைத்த போது எம்.எஸ்.வி. ஐந்து பாடல்களுக்கு மட்டும் தான் இசையமைத்தார்.

'ஜெனோவா திரைப்படத்தில் எம்.எஸ்.வி. இசையமைத்தப் பாடல்களைக் கேட்ட எம்.ஜி.ஆர். நேரில் சென்று அவரைப் பாராட்டியதையும் "நீங்கள் தான் இனி என் படங்களுக்கு இசையமைக்கணும்" என்று சொன்னதையும் கடந்த கட்டுரையில் பார்த்தோம்.

அப்போதைய திரைத்துறை வழக்கப்படி ஒவ்வொரு படத்தயாரிப்பு நிறுவனத்திற்கென பழக்கப்பட்ட, ஒப்பந்தமிட்டுக் கொண்ட இசையமைப்பாளர்கள் இருப்பார்கள். அந்தந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தமிட்டுக் கொண்ட இசையமைப்பாளரை தவிர வெளி நபர் இசையமைக்க முடியாது.

இதனால் 'ஜெனோவா' படத்திற்கு பிறகு 'மலைக்கள்ளன்', 'கூண்டுக்கிளி' என்ற படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தாலும் அதில் எம்.எஸ்.விக்கு வாய்ப்புத்தர முடியவில்லை.

1955-ல் 'குலேபகாவலி' என்றத் திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து எம்.எஸ்.வி மற்றும் டி.கே.ஆர். இசையமைத்தார்கள். 1957ல் 'மகாதேவி' படத்திலும் 1960ல் 'மன்னாதி மன்னன்' என்றத் திரைப்படத்திலும் இவர்கள் கூட்டணி தொடர்ந்தது.

இந்தப் படத்தில் இடம் பெற்ற "அச்சம் என்பது மடமையடா" என்றப் பாடல் அடி தூள் வகை. இன்னும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்! இந்தப் படப்பாடல்கள் எம்.ஜி.ஆர், கண்ணதாசன், எம்.எஸ்.வி, டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் புகழை உச்சிக்கு கொண்டு சென்றன. அவர்களது திரையுலக பயணத்தில் இந்தப் படம் ஒரு மகுடம் எனலாம்.

எம்.ஜி.ஆர். எங்கு புறப்பட்டு சென்றாலும் தினமும் காலை அவரது காரில் முதலில் ஒலிக்கும் பாடல் இது தான்! அந்த அளவிற்கு உற்சாக பானம் இந்த பாடல் என்பதில் சந்தேகமில்லை.

தேவர் பிலிம்ஸ் 7.7.1955ல் சின்னப்பதேவர் தனது நண்பர்கள் பலரிடம் பண உதவி பெற்று ஆரம்பித்த நிறுவனம். இவரது படங்கள் எல்லாம் 'தாய்' அல்லது 'தா' என்ற எழுத்தில் தொடங்கும். ஆரம்ப காலத்தில் சாண்டோ சின்னப்ப தேவரும் எம்.ஜி.ஆரும் துணை நடிகர்களாக இருந்த காலம் முதலே நட்பாக பழகியவர்கள். இருவரும் உடற்பயிற்சி மன்றத்தில் கம்பு சண்டை பழகியவர்கள். இதனால் தேவர் படங்களிலெல்லாம் எம்.ஜி.ஆருக்கு கம்பு சண்டை காட்சிகள் நிச்சயம் உண்டு.

சின்னப்பதேவர் மேற்கத்திய இசை அதிகம் பயன்படுத்தும் மெல்லிசை மன்னர்களை வைத்து தனது 'வேட்டைக்காரன்' படத்தை எடுக்க ஆசைப்படுகிறார். தனது படத்தில் பணியாற்றுபவர்களுக்கு மொத்த ஊதியத்தையும் படம் தொடங்கும் போதே, அதுவும் ஒரே தவணையாக கொடுப்பவர் இவர். அதனால் 45 நாட்களில் படம் எடுத்து முடித்தும் விடுவாராம். சொன்ன தேதியில் படமும் வெளியிட்டு விடுவார் அப்படியொரு பழக்கம் தேவருக்கு.

கி.பானுமதி கிருஷ்ணகுமார்

இவர், பூ, பழம், கட்டுக்கட்டாக பணக்கட்டுகளுடன் எம்.எஸ்.வி.யின் வீட்டுக்குப் போய் தனது 'வேட்டைக்காரன்' படத்துக்கு இசையமைக்கக் கேட்கிறார்.

"உங்கப் படங்களுக்கு வழக்கமாக மாமா தானே இசையமைக்கிறார்? (மாமா என்பது திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்) நான் எதற்கு? அவரே இருக்கலாமே?" என்றார் எம்.எஸ்.வி.

விநியோகஸ்தர்கள் எல்லாம் ஆசைப்படறாங்க நீங்க இசையமைக்கணும்னு அதான்... சின்னப்ப தேவர் விடுவதாகயில்லை.

எம்.எஸ்.வி.யின் நினைவு பின்னோக்கி சுழல்கிறது. முன்பு ஒரு முறை ஜூபிடர் பிக்சர்சிலிருந்து விலகி நடிகர் பாலைய்யாவின் நாடக கம்பெனியில் சேர்ந்து, அங்கு ராமாயண நாடகத்தில் நடிக்கும்போது, ராமன் உடைக்க வேண்டியவில்லை துணை நடிகனான தனது அதீத ஆர்வத்தால் எடுக்கப் போக வில் உடைந்துவிட பொதுமக்கள் "இவருக்கே சீதையை கட்டிவை" என்று கூச்சல் போட, நடிகர் பாலைய்யா தன்னை அடி அடி என அடிக்க அங்கிருந்து கிளம்பி வைரம் அருணாசல செட்டியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததும், அங்கும் பிரச்சனை துரத்த கே.வி.மகாதேவனிடம் கோரசிஸ்பாட வாய்ப்பு கேட்கப் போனது நினைவில் நிழலாடுகிறது. "விசு கொஞ்சம் உள்ளே வா"-எம்.எஸ்.வியின் அம்மா நாராயணிக்குட்டி அம்மாவின் குரல் தான் அவரை நினைவுலகத்திற்கு இழுக்கிறது.

முன்பு "நீ கோரஸ் பாட வந்தால், கோரஸ் பாடுறதோடு நின்று விடுவாய். உனக்கிருக்கும் திறமைக்கு நீ நன்றாக முன்னுக்கு வருவாய், கோயம்புத்தூர்ல ஜூபிடர் பிக்சர்சுக்குப் போ, அவங்க உன்னை திரும்ப வேலை சேர்த்துக்குவாங்க" என்று கே.வி.மகாதேவன் சொன்னதுடன் நில்லாமல் தனக்கு புது வேட்டி, சட்டை, டிக்கட்டுக்கு கைச்செலவுக்கு பணம் கொடுத்து உதவியதும் நினைவுக்கு வருகிறது.

"என்னம்மா" என்றபடி அம்மா முன்னே போய் நிற்கிறார்.

நாராயணிகுட்டி அம்மா மகனை அறைந்து விடுகிறார். "தேவர் கேட்டதும் மகாதேவன் மாமா வேலை செய்யும் கம்பெனியில் நான் எப்படி செய்வது என்று கேட்காமல் மவுனமாக இருக்கியே" அவருக்குப் போட்டியாக போகப் போறியா?

"இல்லைமா நான் வரலை என்று தான் சொல்லிக் கொண்டிருந்தேன்".

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சின்னப்ப தேவர் கிளம்பிவிட்டார். இதையெல்லாம் பின்னாளில் கேள்விப்பட்ட கே.வி.மகாதேவன், "நீ செய்திருக்கலாமே, நான் என்ன நினைக்கப் போகிறேன்" என்று பெருந்தன்மையுடன் சொன்னார்.

கே.வி.மகாதேவன் மீது எம்.எஸ்.வி. வைத்திருந்த அன்பும் மரியாதையும் சொல்லில் அடங்காதது. "ஜெனோவா" படத்தில் இசையமைத்த போது எம்.எஸ்.வி. ஐந்து பாடல்களுக்கு மட்டும் தான் இசையமைத்தார். ஞானமணி, டி.ஏ.கல்யாணம் என்பவரும் இசையமைத்து இருந்தார்கள். 'குலேபகாவலி'யில் மொத்தம் 11 பாடல்களில் 10 பாடல்கள் எம்.எஸ்.வி. இசை. "மயக்கும் மாலை பொழுதே நீ போ போ" என்ற பாடல் மட்டும் கே.வி.மகாதேவன் இசையமைத்தது. குலேபகாவலியில் கசல், கிராமியம், மேற்கத்தியம், முஜ்ஷா என்று ஒவ்வொரு பாடலும் ஒரு வகை!

இந்தப் படத்தில் "வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சிப் பெற்றார் பகடையிலே" என்று ஒரு பாடல். படத்தில் அரசகுமாரியாக டி.ஆர்.ராஜகுமாரி நடித்திருந்தார். இவர் பகடை விளையாட்டில் சூழ்ச்சி செய்து பிற நாட்டு மன்னர்களை தோற்கடித்து அவர்களை அடிமையாக்கிவிடுவார். எம்.ஜி.ஆர். அந்த சூழ்ச்சியை முறியடித்து டி.ஆர்.ராஜகுமாரியை மணப்பது கதை.

ஒவ்வொரு மன்னரும் வேறு வேறு நாட்டை, சேர்ந்தவர்கள் என்ற கருப்பொருளை வைத்துக்கொண்டு ஒரே பாடலில் பலமெட்டு பல மொழிகளில் பாடுவதாக பாடல் அமைத்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள். இது ஒரு ராக மாளிகைப் பாடல்! ஒரே பாடலில் பல ராகங்கள் அமைத்துப் பாடினால் அதை "ராக மாலிகை" என்பார்கள். ராகங்களால் தொகுத்த மாலை என்று பொருள்.

தஞ்சை ராமைய்யா தாசின் நையாண்டி வரிகளுக்கு ஒரே பாடலில் கர்நாடகம், மேற்கத்தியம், இந்துஸ்தானி என பல வகை இசையும் இருக்கும் கலக்கலானப் பாடல் அது! இன்றும் ரசிக்கலாம்.

இதே போல் 1955ல் வந்த "போர்ட்டர் கந்தன்" என்ற திரைப்படத்திலும் பல்சுவைப் பாடல் இருக்கும். இது போன்ற பல்சுவை பாடல்கள் மட்டுமே 50க்கு மேல் இசையமைத்திருக்கிறார் எம்.எஸ்.வி. இது அவரது தனித்தன்மை என்று கூட சொல்லலாம்!

எல்லோருக்கும் தெரிந்த உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் 'பாரதவிலாஸ்' படத்தில் வரும் "இந்திய நாடு என் வீடு" என்றப் பாடலை சொல்லலாம்.

1957ல் 'மகாதேவி' என்ற படத்திலும் எம்.ஜி.ஆருடன் மெல்லிசை மன்னர்கள் இணைந்தார்கள். இந்தப் படமும் வசனத்திற்காகவும் பாடல்களுக்காகவும் வரவேற்புப் பெற்ற படம்.

"மானம் ஒன்றே பெரிதென கொண்டு" என்றப் பாடல் அத்தனை உணர்ச்சி பிழம்பான வரிகளும் இசையும், மெட்டும் கொண்ட பாடல்! இந்தப் பாடலை எந்த கச்சேரியிலும், நிகழ்ச்சியிலும் எடுத்துப் பாட முடியாது. அத்தனை சவாலானப் பாடல். ஒரே ஒரு முறை இந்தப் பாடலை கல்பனா ராகவேந்தர் பாடி பலத்த கைதட்டல் பெற்றார்!!

1960ல் 'மன்னாதி மன்னன்' என்ற எம்.ஜி.ஆர். நடித்தப் படத்தில் மெல்லிசை இரட்டையர்கள் மீண்டும் இணைந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் ஒரு பாடல். எம்.ஜி.ஆருக்கும், பத்மிமனிக்கும் நடனம் போட்டி! பரத நாட்டியம் ஆடிக்கொண்டே கால்களினால் தரையில் சிங்கம் உருவத்தை வரைய வேண்டும். ஓவியத்தில் வால், கண், நகம் ஏதும் விடுபடாமல் சரியாக ஆடினால் மட்டுமே சரியாக வரையமுடியும்.

வெறும் பரத நாட்டியம் என்றால் அக்மார்க் கர்நாடக மெட்டில் இசையமைத்தால் போதும். ஆனால் பரதக்கலையின் மிக சிரமமான ஒரு வகை, அதாவது, ஓவியம் வரைவதற்கான நடன அடவுகள், ஜதிகள், ராகங்கள் எப்படி வரவேண்டுமோ அதை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ற இசை வரும்படி அமைக்கவேண்டும். அது அத்தனை லேசானதில்லை. இப்படி சவாலான சிக்கலான பாடல்களை இசையமைப்பதில் எம்.எஸ்.வி. வல்லவர்!

உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் கதை வெளிநாட்டில் நடப்பதாக வருபவை. அதனால், எம்.ஜி.ஆர். சில வெளி நாட்டு இசை கேசட்டுகளை எம்.எஸ்.வியிடம் கொடுத்து, "இதையெல்லாம் கேட்டுப் பாருங்கள். இது போன்ற இசை எனக்கு வேணும்" என்று சொல்ல அந்த கேசட்டுக்களை அவரிடமே திருப்பித் தந்து, "நான் சொந்தமாகவே மெட்டுப் போட்டுத் தருகிறேன். இதெல்லாம் வேண்டாம் என்று கேசட்டுகளை திரும்பி தந்துவிட்டார் எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆருக்கு ஆரம்ப காலத்தில் பின்னணி பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஏ.எம்.ராஜா. பிறகு டி.எம்.சவுந்திர ராஜன், மூன்று பாடல்களுக்கு மட்டும் பி.பி.சீனிவாஸ். பின்பாதியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் கே.ஜே.யேசுதாஸூம் பாடினார்கள். இந்த பின்னனி பாடகர்கள் தேர்வின் மூலம் எம்.ஜி.ஆருக்கான ஒரு பாணியையே எம்.எஸ்.வி. உருவாக்கினார் எனலாம். அது எப்படி என்று பார்க்கலாமா? அதற்கு நாம் கால இயந்திரத்தில் ஏறி கொஞ்சம் பின்னே பயணிக்கலாமா?

1949-ல் கவியரசர் கண்ணதாசன் திரைத்துறையில் கதை வசனம் எழுதுகிறார். 1950-ல் 'நல்லத்தம்பி' என்றொரு படம் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்தது. "விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன்டி, மேனாட்டாரை விருந்துகழைச்சி காட்டப் போறேன்டி"- என்றப் பாடலில் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மொத்த பட்டியலும் மின்விசிறியில் ஆரம்பித்து, டெஸ்ட் டியூப் குழந்தை வரை எல்லாம் அதில் தொலை நோக்காக சொல்லப் பட்டிருக்கும்.

1950 'மந்திரகுமாரி' என்ற திரைப்படம், ஐம்பெரும் காப்பியத்தில் ஒன்றான 'குண்டலகேசி' கதையை ஒட்டி எடுக்கப்பட்ட படம். கலைஞர் கருணாநிதி வசனத்தில் வந்தது. நாட்டுக்கு எதிராக செயல்படும் கணவனை மனைவியே மலையிலிருந்து தள்ளிவிடும் காட்சி கொண்ட அந்த திரைப்படம் சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மேலும் டி.ஆர்.சுந்தரம், டங்கன் போன்ற புதுமை விரும்பிகளும் மாற்றத்திற்கான படங்களை எடுக்க முன்வந்தனர்.

பின்னணி இசைத்தொழில் நுட்ப வளர்ச்சி திரைத்துறையில் மாபெரும் மாற்றங்களை கொண்டு வந்தது. அது என்ன? அதையெல்லாம் பார்க்க வேண்டுமென்றால் இப்போதைக்கு கால இயந்திரத்தை விட்டு இறங்கிவிடுவோம். வரும் தொடரில் பார்க்கலாம்.

இணைய முகவரி:

banumathykrishnakumar6@gmail.com

Tags:    

Similar News