சிறப்புக் கட்டுரைகள்

உயிராற்றலின் மையம் வர்மப் புள்ளிகள்!

Published On 2024-06-30 06:57 GMT   |   Update On 2024-06-30 06:57 GMT
  • உடல் சார்ந்த நோய்களில் இருந்து நாம் தப்பித்து கொள்வதற்கு, மருத்துவத்தை நாடுகிறோம்.
  • வர்மக்கலையோடு இணைந்த உடல் சார்ந்த பயிற்சிகளை செய்யும் போது உடலிலே உயிர் ஆற்றல் சீராகும்.

அன்பார்ந்த வாசகர்களே, நாம் ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கும் போது, அந்த பொருளை மிகவும் பத்திரமாக பாதுகாக்கிறோம். அந்த பொருள் கூடுமான வரை எந்த விதமான சிக்கலும் இல்லாமல் இயங்குவதற்கு நாம் பலவிதமான முயற்சிகளை எடுக்கிறோம். காரணம் நாம் அதில் நமது பணத்தை முதலீடு செய்து உள்ளோம். ஆனால் இந்த உடல் என்பது நாம் விலை கொடுத்து வாங்கி வந்த ஒரு பொருள் அல்ல. நமது தாய், தந்தை மூலமாக இலவசமாக நாம் கேட்காமலும், நமது அனுமதி இல்லாமலும் வந்த பொருள் தான் இந்த உடல்.

இலவசமாக வந்த உடல் என்பதால் தான் நாம் பொருளுக்கு கொடுக்கும் மதிப்பை இந்த உடலுக்கு கொடுப்பது இல்லை. இந்த உடலுக்கு பெரிய அளவுக்கு ஒரு பிரச்சனை வரும் போது தான், நம் உடல் மீது நமக்கு அக்கறை வருகிறது. உடல் சார்ந்த பிரச்சனைகள் வலியாக ஆரம்பம் ஆகி, நோயாக மாறி அடுத்து மரணத்தில் நம்மை முடிக்கிறது. எனவே இந்த உடல் என்பது கர்மா/பதிவுகளின் அடையாளம் ஆகும். இந்த கர்மாவில் இருந்து விடுபட குரு உதவி தேவைப்படுகிறது.

'தந்தை தாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து, தழைத்ததொரு உடலாகி உலகில் வந்தேன் அந்த ஈருயிர் வினைகள் அறமோ மற்றோ அளித்த பதிவுகள் எல்லாம் என் சொத்தாச்சு இந்த அரும் பிறவியில் முன் வினையறுத்து எல்லையில்லா மெய் பொருளை அடைவதற்கு வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை, வணங்கி குரு திருவடியை வாழ்த்தி வாழ்வோம்'

என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது கவியில் கூறுகிறார்.

தந்தையும், தாயும் ஒன்று சேர்ந்ததால் இந்த உடலும் அதன் மூலமாக கர்மவினை பதிவுகளும் நமக்கு சொத்தாக வந்தது. இதில் நல்லதும் உள்ளது, மற்றதும் உள்ளது.

இந்த பிறவியில் நம் முன்னோர்கள் பதிவுகளை அறுத்து இறைவனை உணர்வதற்கு வந்த ஒரு உதவி தான் குரு என்று மகரிஷி கூறுகிறார்.

சரி, நான் பதிவுகள் இல்லாமல் இருக்கிறேனா? அப்படி இருக்கிறது என்றால் என்ன ஆதாரம் என்று நாம் கேட்போம். அதற்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் உடலிலே நோய், உள்ளத்திலே களங்கம், மனதிலே குழப்பம், வாழ்க்கையில் சிக்கல் என்று இந்த நான்குமோ அல்லது இதில் ஏதாவது ஒன்று இருந்தாலோ நாம் கர்மாவின்/பதிவின் அடையாளம் என்கிறார்.

எனவே இந்த பதிவுகள் 80 சதவீதம் உடல் சார்ந்த நோய்களாகவும், 20 சதவீதம் மனம் சார்ந்த நோய்களாகவும் வரும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

இந்த பதிவுகளில் 80% என்பது உடல் சார்ந்து இருப்பதால் தான் நாம் உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு முன்னால் இந்த உடலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். திருமூலர் அவர்கள் தனது பாடலிலே உடலை பற்றி,

'உள்ளம் பெருங்கோயில் ஊணுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானார்க்கு வாய்க் கோபுரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்

கள்ளப்புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே' - என்கிறார்.

கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

உடலே கோவில், நமது வாயே கோபுரவாசல், இது யாருக்கு புரிகிறதோ அந்த சீவன் தான் சிவம் என்கிறார். ஆனால் இவை ஞான இந்திரியங்கள் (புலன்கள்) ஆகிய தோல் (தொடு உணர்வு), நாக்கு (சுவை உணர்வு), மூக்கு (வாசனை உணர்வு), கண் (பார்வை உணர்வு), காது (ஓசை உணர்வு) ஆகியவை என்று உன் கட்டு பாட்டுக்குள் வருகிறதோ அன்று தான் இந்த உடல் ஆலயம் என்பது விளங்கும். இல்லை என்றால் இந்த புலன்கள் நம்மை மாயையை நோக்கி அழைத்து சென்று விடும் என்கிறார்.

எனவே உடல் சார்ந்த நோய்களில் இருந்து நாம் தப்பித்து கொள்வதற்கு, மருத்துவத்தை நாடுகிறோம். அது தான் அலோபதி மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர் வேத மருத்துவம், ஓமியோபதி மருத்துவம், யுனானி மருத்துவம் என்று ஏதாவது ஒரு வழியை நாடி நாம் நோய்களை போக்கி கொள்ளவோ அல்லது அதனுடைய தாக்கத்தை குறைத்து கொள்ளவோ முயற்சி செய்கிறோம். சில நேரம் வெற்றி பெறுகிறோம்.

ஆனால் முற்காலத்தில் மருத்துவத்திற்கு முன்னால் மருந்து இல்லாத மருத்துவமாக ஒரு கலை இருந்தது. அதன் பெயர் தான் வர்மக்கலை. 12-ம் நூற்றாண்டில் இந்த கலையை மர்மம் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். 17-ம் நூற்றாண்டு முதல் தான் வர்மம் என்று பெயரிட்டு இருக்கிறார்கள். வர்மம்/மர்மம் என்றால் நம் கண்களுக்கு தெரியாத ஒன்று என்று பொருள்.

இது ஆதி சித்தர் சிவன் மூலமாக பார்வதி தேவி நந்தி தேவர், முருகன், அகத்தியர், சப்த ரிஷிகள், 18 சித்தர்கள் வழியாக வந்து இன்று வரை இந்த கலை உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. இதை உலகிற்கு வருவதற்கு அகத்தியர், புலிப்பானி சித்தர், போகர், தேரையர், கருவூரார் சித்தர், சாரங்கி நாதர், ராம தேவர் ஆகியோர் மிகவும் முக்கியமானவர்கள்.

வர்ம வைத்தியம் இன்றும் இந்தியாவில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரள மாநிலத்திலும் உள்ளது. வெவ்வேறு சித்தர்கள் உடைய நூல்களிலேகிட்டத்தட்ட 1000 வர்மங்களை பற்றி குறிப்பிட்டு இருந்தாலும், 108 வர்ம புள்ளிகள் தான் மிகவும் முக்கியமானதாக உள்ளது என்று சித்தர்கள் தனது ஓலை சுவடிகளிலே குறிப்பிட்டு உள்ளார்கள்.

இந்த 108 வர்ம புள்ளிகள் தான் உயிர் ஆற்றல் மையங்கள் ஆகும். இந்த இடங்களில் மாத்திரை அளவு (மருத்துவ அளவு) அழுத்தம் கொடுத்து அங்கு தடைபட்டு இருக்கின்ற உயிர் ஆற்றலை மீண்டும் உயிர்பித்து காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, வலி மற்றும் நோய்களில் இருந்து விடுபட வைக்கும் ஒரு அற்புதமான கலை தான் வர்மக் கலை.

இந்த வர்மக்கலையோடு இணைந்த உடல் சார்ந்த பயிற்சிகளை செய்யும் போது உடலிலே உயிர் ஆற்றல் சீராகும். இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழும். இன்றைய விஞ்ஞானஉலகத்திலே, இப்படி வர்மக் கலையோடு இணைந்த உடற்பயிற்சிகள் இருக்கிறதா என்கின்ற கேள்வி தான் அது. இதற்கு விடையாக வருபவர் தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள். கலியுக சித்தர்களில் ஒருவராகிய வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்ட எளிய முறை குண்டலினி யோக உடற்பயிற்சியில், வர்மக்கலையில் சொல்லப்பட்டு இருக்கின்ற அத்தனை வர்ம புள்ளிகளும் அடக்கம் என்றால் நமக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்.

நம்முடைய கர்ம வினை பதிவுகள் உடல் சார்ந்த பிரச்சனைகளாக வரும் போது அது முதலில் வடிவம் எடுப்பது தான் வலி. இது ஒருவருக்கு காலத்தால் நீண்டு போகும் போது அல்லது நாம் கவனமின்மை காரணமாக முயற்சி செய்ய தவறிவிட்டால் அது அடுத்த வடிவமாக வருவது தான் நோய்.

எப்பொழுது இந்த நோய் உடலை பாதிக்கிறதோ, அது நமது மனதையும் பாதித்து மரணத்தில் விட்டு விடும். உடல் சார்ந்த கர்ம வினை பதிவுகள் எடுக்கும் கடைசி வடிவம் தான் மரணம். எனவே இதிலிருந்து நாம் தப்பித்து கொள்ள ஒரே வழி உடற்பயிற்சி மட்டுமே.

தினமும் குறைந்த பட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது நலம். இன்றைய கால கட்டத்திற்கு ஏற்றபடி விஞ்ஞான, மருத்துவ, மெய்ஞான ரீதியாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி தான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பயிற்சியாகும்.

நாம் உடற்பயிற்சியின் பயன்களை தெரிந்து கொள்வதற்கு முன்னால், இது வர்மக் கலையோடு எப்படி தொடர்பு உள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

மனிதருடைய உடலில் 96 தத்துவங்கள் அடங்கி உள்ளது என்பதை நாம் அறிவோம். இதில் 56 தத்துவங்கள் ஸ்தூல தத்துவங்களாகவும் (பரு உடல் சார்ந்தது) 39 தத்துவங்கள் சூக்கும தத்துவங்களாகவும் (நுண்ணுடல் சார்ந்தது) 1அதி சூக்கும் தத்துவமாகவும் (ஆத்மா) உள்ளது.

இதில் 31 தத்துவங்கள் தான் நம் உயிரோடு தொடர்பாக உள்ளது. அவை 10 நாடிகளும், 5 பூதங்களும், 10 வாயுக்களும், 6 ஆதாரங்களும் (7 ஆதாரங்களில் துரியம் என்பது பரமாத்மா, எனவே அது கணக்கில் வராது) ஆகும்.

இதில் நாடிகள், ஆதாரங்கள், பூதங்கள் (10+6+5=21) ஒரு பிரிவாக இருந்து 10 வாயுக்களை இயக்க உதவி செய்கிறது. இதனால் நம் உடலில் உள்ள 108 உயிர் ஆற்றல் மையங்களும் சீராக வேலை செய்ய உதவி செய்கிறது.

இந்த 108 உயிர் ஆற்றல் மையங்களை தான், நாம் வர்ம புள்ளிகள் என்று அழைக்கிறோம். இந்த வர்ம புள்ளிகள் எப்படி இந்த 21 தத்துவங்களோடு சேர்ந்துள்ளது என்று சித்தர்கள் செய்த ஆராய்சியின் விளைவாக விடை கிடைத்தது.

இந்த 108 வர்ம புள்ளிகளும் இப்படி தொடர்டபு உள்ளது. இது சரியாக இயங்கினால் நம் உடலிலே முக்குற்றம் நிகழாமல் பார்த்து கொள்ளலாம். அது தான் வாதம், பித்தம், கபம் ஆகும்.

நமக்கு வரும் நோய்கள் எதுவாக இருந்தாலும் இந்த மூன்றை தாண்டி வராது. எல்லா நோய்களும் இந்த மூன்றுக்குள் அடக்கம். இந்த மூன்றிலும் இந்த 108 வர்ம புள்ளிகள் எப்படி தொடர்பு கொண்டுள்ளது என்பது தெரிந்தால் மேலும் பிரம்மிப்பாக இருக்கும்.

வாதம் சார்ந்த வர்ம புள்ளிகள்         - 64

வாதத்தின் துணை வர்ம புள்ளிகள்  - 4

பித்தம் சார்ந்த வர்ம புள்ளிகள்         - 26

பித்தத்தின் துணை வர்ம புள்ளிகள்  - 5

கபம் சார்ந்த வர்ம புள்ளிகள்                - 6

கபத்தின் துணை வர்ம புள்ளிகள்        - 3

                                                                       =108

வாதம், பித்தம், கபம் சமன்பட்டால் எந்த நோயும் நமக்குள் எழுச்சி பெறாது. இந்த 108 வர்ம புள்ளிகளையும் அடக்கிய அரிய பொக்கிஷத்தை பற்றி ஆராய்ச்சி செய்வோம்.

Tags:    

Similar News