null
- குடிகாரத் தாய்மாமனை ஊரே தூக்கிவைத்துக் கொண்டாடியது.
- யாரொருவரின் வார்த்தைகளையும் உதாசீனப்படுத்திவிடக் கூடாது.
'உள்ளுணர்வு என்பது மனிதனுடைய மனம் அமைதியாக இருக்கும் தருணங்களின்போது, அவனில் இயல்பாகவே தோன்றும் ஆன்ம வழிகாட்டல் ஆகும்'.
-ஸ்ரீஸ்ரீபரமஹம்ச யோகானந்தர்
அந்த வீட்டின்முன் துக்க முகத்துடன் ஒரு கூட்டம் உட்கார்ந்திருந்தது. வீட்டிற்குள் ஒரே அழுகைக் கூப்பாடு. அந்தச் சத்தம் தெருமுனைவரையில் கேட்டது.
மூன்று மாத ஆண் குழந்தை இறந்துவிட்டது. அதனைத் தன் மடியில் கிடத்திவைத்து அழுது கொண்டிருந்தாள் அந்தத் தாய். அவளைச் சுற்றிலும் சில பெண்கள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர்.
நான்கைந்து நாட்களாகக் குழந்தைக்குக் காய்ச்சல். பட்டணத்து டாக்டரிடம் காண்பித்திருக்கிறார்கள். அவர் ஊசி போட்டு அனுப்பியுள்ளார். மருந்து எதையும் உடம்பு ஏற்கவில்லை.
மறுநாள் காலை, குழந்தை நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டார்கள். பின்னர், அது அசைவற்றுக் கிடப்பதைப் பார்த்துப் பதறியடித்து, நாட்டு வைத்தியரிடம் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். அவர் நாடி பிடித்துப் பார்த்துவிட்டுக் குழந்தை இறந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்.
பச்சிளம் குழந்தை என்பதால், அன்று மாலையிலே அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. உறவினர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள். காலையில் வெளியே சென்றிருந்த குடிகாரத் தாய்மாமன் மட்டும் வரவில்லை. அவனுக்காகக் காத்திருந்தார்கள்.
இருட்டத் தொடங்கிவிட்டது. லேசாக மழைத்தூறல் விழுந்து கொண்டிருந்தது. மேற்கொண்டு காத்திருக்க முடியாது என்ற நிலையில், குழந்தையை அடக்கம் செய்வதற்காகப் புறப்பட்டனர்.
பட்டுத்துணியால் அலங்கரிக்கப்பட்ட சிறிய சவப்பெட்டியில் குழந்தையின் உடல் கிடத்தப்பட்டு, அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டது. கல்லறைத் தோட்டத்தை அடைந்தபோது நன்றாகவே இருட்டிவிட்டது. மத ஒழுங்கு
முறைமைகளுக்குப்பின், அங்கே வெட்டப் பட்டிருந்த குழியில் சவப்பெட்டி இறக்கப்பட்டு, அதன்பின் மண்ணைத் தள்ளி மூடினார்கள்.
குழந்தையை அடக்கம் செய்துவிட்டுக் கல்லறையில் இருந்து புறப்படும்போது, நல்ல குடிபோதையில் குழந்தையின் தாய்மாமன் அங்கு வந்து நின்றான்.
'எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க?'
'குழந்தையை அடக்கம் பண்ணியாச்சி. அப்புறம் இங்க என்ன வேலை?'
'என்னது... அடக்கம் பண்ணிட்டீங்களா? நான்தான் தாய்மாமன். நான் இல்லாம நீங்க எப்படி அடக்கம் பண்ணலாம்?'
'மாப்ள, உனக்காக காத்திருந்தோம். மேற்கொண்டு வச்சிருக்க முடியாதுங்குறதுனால அடக்கம் பண்ணிட்டோம்'.
'அதெல்லாம் ஏத்துக்க முடியாது. நான் குழந்தையோட முகத்தை பார்த்தே ஆகணும். இல்லேன்னா, இங்கேயே தீக்குளிப்பேன்' என்று பயங்கர ரகளையில் இறங்கினான் தாய்மாமன்.
வேறு வழியின்றி, மூடிய குழியின் மண்ணை எடுத்துவிட்டு, சவப்பெட்டியை வெளியே தூக்கினர். பெட்டியின் மூடி திறக்கப்பட்டது. இருட்டிவிட்டதால் முகம் சரியாகத் தெரியவில்லை. ஒருவரின் கையிலிருந்த டார்ச் லைட்டை வாங்கி, அந்த வெளிச்சத்தில் குழந்தையின் முகத்தை உற்று நோக்கினான் தாய்மாமன். குழந்தையின் கருவிழிகள் இமைகளுக்குள் லேசாக அசைவதுபோல் அவனுக்குத் தோன்றியது. இன்னும் குனிந்து குழந்தையைப் பார்த்தான். ஆம், விழிகளின் அசைவு தெரிகிறது. குடிபோதையிலும் தெளிவாகக் கத்தினான்.
'குழந்தை சாகல... உயிர் இருக்கு... பாருங்க, கண் அசையுது அசையுது' என்று குழத்தையைத் தூக்கிக்கொண்டு துள்ளிக் குதித்தான். எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்!
உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். குழந்தையைப் பரிசோதித்த டாக்டர், 'குழந்தை உயிருடன்தான் இருக்கிறது' என்பதை உறுதிப்படுத்தி, அவசர சிகிச்சை அளித்தார். குழந்தை கண்விழித்துப் பார்த்தது. குடிகாரத் தாய்மாமனை ஊரே தூக்கிவைத்துக் கொண்டாடியது.
'கல்லறைக்குப்போன எம்புள்ளைய கடவுளா வந்து காப்பாத்திட்டே அண்ணே' என்று குழந்தையின் தாய், அவனது கால்களைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
ஆச்சரியம்! அதிசயம்! அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி, சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, அதே அலுவலகத்தில் நானும் பணியாற்றினேன். அப்போது ஒருநாள், அலுவலக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில், அவன் இந்த அற்புத விஷயத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டான்.
ஒரு குடிகாரனின் பிடிவாதம், கல்லறைக் குழியிலிருந்து ஒரு குழந்தையைக் காப்பாற்றியது.
எப்படி? அது ஓர் உள்ளுணர்வு. ஒருவர் தன் அகத்தே கொண்டிருக்கும் ஓர் இயல்பான உணர்வு.
அதனை 'இயல்பூக்கம்' என்று சொல்கிறார்கள்.
எனவே, யாரொருவரின் வார்த்தைகளையும் உதாசீனப்படுத்திவிடக் கூடாது. அவற்றில் ஏதோ ஒரு விஷயம் இருக்கும்.
நம் பெரும்பாலான முடிவுகள், நம் உள்ளுணர்வின் அடிப்படையில்தான் எடுக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இன்னதென்று நம்மால் கூற முடியாது.
கண்ணகியின் சிலம்பை விற்றுப் பொருளீட்டும் எண்ணத்துடன்தான், கோவலன் மதுரைக்குச் சென்றான். ஆனால், அவன் சென்றதிலிருந்தே கண்ணகிக்கு இருப்புக் கொள்ளவில்லை. கோவலனுக்கு ஏதோ நடக்கப்போகிறது என முன்கூட்டியே உள்ளுணர்வாக உணர்ந்தாள். அதனால்தான், அங்குள்ள ஆயர்குலப் பெண்களுடன் ஆய்ச்சியர் குரவை நிகழ்த்தித் திருமாலை வழிபட்டாள் என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.
உள்ளுணர்வு ஒன்றைச் சொல்லும். அதில் அர்த்தம் இருக்கும். அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது.
'இப்போது இதைச் செய்ய வேண்டாம். கொஞ்சம் பொறுத்திருப்பது நல்லது' என்று உள்ளுக்குள் ஓர் உணர்வு ஏற்பட்டால், அது ஓர் எச்சரிக்கை என்பதே உண்மை.
'இந்த வாய்ப்பை நழுவவிட வேண்டாம். உடனே ஏற்றுக்கொள்' என்று ஒரு குரல் உள்ளுக்குள் ஒலித்தால், அது சரியானதாகத்தான் இருக்கும்.
உள்ளுணர்வுகளை ஒருபோதும் புறந்தள்ளிவிடக் கூடாது. நமக்குத் தெரியாமல் நம் மனம் சேமித்து வைத்திருக்கும் தகவல்களைக் கொண்டுதான் உள்ளுணர்வுகள் வெளிப்படுகின்றன.
திடீரென வெளியூர்ப் பயணம். அவசரமாகப் புறப்பட்டு வீட்டிலிருந்து வெளியே வரும்போது, மனதில் ஏதோ ஒரு சத்தம். ரயிலைப் பிடிக்கிற அவசரத்தில், அந்தச் சத்தத்தைப் பொருட்படுத்தாமல் ஆட்டோவில் ஏறிவிடுவோம். பாதி தூரம் சென்ற பிறகுதான், செல்போனை சார்ஜரோடு வைத்துவிட்டு வந்தது நினைவிற்கு வரும்.
உள்ளுணர்வு நமக்கு உணர்த்துவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பல பிரச்சனைகள் அல்லது ஆபத்துகளிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள அது நமக்கு அறிவுறுத்தும். சிலர் தங்கள் மனதின் குரலுக்கும் செவிகொடுக்க மாட்டார்கள்; மற்றவர்கள் உணர்ந்து சொல்வதையும் கேட்க மாட்டார்கள். முட்டி மோதி விழுவதும், நெற்றியைத் தடவிக்கொண்டு எழுவதும் அவர்களுக்கு சகஜமான விஷயம்தான்.
'இப்படித்தான் நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்' என்று சிலர் சொல்வார்கள். இப்படியேதான் ஒவ்வொரு முறையும் சொல்வார்கள். எந்த ஒன்று நடந்து முடிந்த பின்னும், 'அப்பவே தெரியும்' என்று சொல்வதன் பொருள் என்ன? உள்ளுணர்வு ஏதோ ஒன்றை அவர்களுக்கு உணர்த்தியிருக்கின்றது. ஆனால், பொறுமையாக நின்று யோசிக்க வேண்டுமே. இல்லை என்றால், என்ன பிரயோஜனம்!
உள்ளுணர்வு பல தகவல்களை நமக்குத் தருவதுண்டு. மோசமான விஷயமாகவோ மகிழ்ச்சியான ஒன்றாகவோ இருக்கலாம். அவற்றிற்கான காரண காரியங்களை அது சொல்வதில்லை.
இந்த உள்ளுணர்வு நம் ஆழ்மனத்தின் அறிவாற்றலா? இல்லை, நுண்ணறிவா? தெரியவில்லை. உளவியல் ஆய்வாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
பறவைகளுக்கு ஒரு விசேஷித்த ஞானம் இருக்கிறது. இல்லையெனில், 'இடம்பெயர்தல்' சாத்தியமாகாது. அது ஓர் அற்புதம்! ஒரு வருடத்திற்கு இரண்டுமுறை ஏற்படும் பருவகால இயக்கம். பறவைகளின் இனப்பெருக்கம் மற்றும் குளிர்காலம் ஆகியவற்றிற்கு இடையே அது நிகழ்கின்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அவை வலசை போகின்றன. சில பறவைகள் எவ்வழியில் சென்று தங்களின் இலக்கை அடைகின்றதோ, அதே வழியிலேயே மீண்டும் தங்கள் இடங்களுக்குத் தடம் மாறாமல் வந்து சேர்கின்றன. தெளிவான ஓர் உள்ளுணர்வுதானே, இச்செயல்பாட்டை அவற்றிற்கு எளிதாக்குகின்றது!
விவேகமற்ற வார்த்தைகளுக்கு நாம் செவிமடுக்கின்றோம். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துகின்றோம். நம் மனம் சொல்வதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றோம்.
ஆசைகள் நம்மை இழுக்கின்றன. அங்குமிங்கும் நம்மை அலைக்கழிக்கின்றன. ஆசைகளின் வழியில் அறிவு மயங்குகின்றது. எனவேதான், உள்ளுணர்வின் எச்சரிப்புகளை பல தருணங்களில் தவறவிட்டுவிடுகின்றோம்.
இதைச் செய்வதா அதைச் செய்வதா, இது சரியா அது சரியா என்று நாம் தடுமாறுகின்ற நேரங்களில் - ஒரு மெல்லிய குரல் நமக்குள் கேட்கக்கூடும். அது ஞானத்தின் ஒலியாகவோ தெய்வத்தின் குரலாகவோ இருக்கலாம். நிதானமாக கவனிக்க வேண்டும். ஒரு தெளிவு நமக்குள் பிறக்கும்.
ஓர் இளைஞனுக்குத் தனது பெற்றோரின் கண்டிப்பு அறவே பிடிக்கவில்லை. அவர்களின் அறிவுரைகள் அவனுக்குக் கசப்பாக இருந்தன. வாழ்க்கையே வெறுமையாகத் தோன்றியது. எனவே, வீட்டை விட்டு வெளியேறி ஒரு குருவிடம் வந்தான்.
'குருவே, என் மனதில் எதுவுமே இல்லை என்றால் என்ன செய்வது?' என்று கேட்டான்.
'அதைத் தூக்கி எறி' என்றார் குரு.
மீண்டும் குருவிடம், 'என்னிடம்தான் எதுவும் இல்லையே, எப்படி தூக்கி எறிவது?' என்று கேட்டான்.
'சரி, அப்படியானால் நீயே வைத்துக்கொள்' என்றார் குரு.
இப்படித்தான், இல்லாத ஒன்றை இருப்பதாக நினைக்கின்றோம். இருப்பதை இல்லாததுபோல் கருதிக்கொண்டு, குழப்பத்திலேயே வாழ்கின்றோம். எவர் ஒருவரின் வீழ்ச்சியாயினும் குழப்பமான மனநிலைதான் காரணமாக இருக்க முடியும்.
கல்வியறிவு மட்டுமே ஒருவனைக் கரைசேர்த்து விடாது. பணமும் புகழும் ஒருவனுக்குப் பாதுகாப்பைத் தந்துவிடாது. தெளிந்த சிந்தை வேண்டும். உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு செயல்படுகின்ற ஞானம் வேண்டும்.
அப்படியானால்தான், வாழ்க்கை சுலபமாகவும் இனிமையாகவும் இருக்கும். ஒருமுறைதானே வாழ்க்கை. இந்த வாழ்க்கையை நன்றாக வாழ்வதுதானே நமக்குப் பெருமை!
போன்- 9940056332