செய்திகள் (Tamil News)

ஊக்க மருத்து விவகாரம்: 2 ஆண்டு தடையை எதிர்த்து அப்பீல் செய்தார் ஷரபோவா

Published On 2016-06-15 08:03 GMT   |   Update On 2016-06-15 08:03 GMT
ஊக்க மருத்து விவகாரத்தில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அளித்த 2 ஆண்டு தடையை எதிர்த்து மரியா ஷரபோவா அப்பீல் செய்துள்ளார்.
மாஸ்கோ:

ரஷியாவை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா(28) தனது 17 வயதில் விம்பிள்டன் பட்டத்தை (2004) வென்று அனைவரையும் வியக்க வைத்தார். கடந்த 15 ஆண்டுகளாக டென்னிஸ் களத்தில் கலக்கி வரும் ஷரபோவா இதுவரை 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். 2014-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டத்துக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லாவிட்டாலும் ஷரபோவா, தோள்பட்டை காயத்துக்கு மத்தியிலும் ஆட்டத்தில் தொய்வின்றி ஜொலித்தார்.

இந்த நிலையில், அண்மையில் ஊக்க மருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதால் சிக்கினார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், மரியா ஷரபோவா டென்னிஸ் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிப்பதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் கடந்த வாரம் தெரிவித்தது.

இந்த நிலையில் விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் ஷரபோவா தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடையை எதிர்த்து மரியா ஷரபோவா அப்பீல் செய்துள்ளார்.

முன்னதாக, உடல்நலனில் பல்வேறு பிரச்சினைகள் இருந்ததால், மெல்டோனியம் என்ற மருந்தை உட்கொண்டு வந்ததாகவும், இந்த மருந்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது பற்றி தனக்கு தெரியாது என்று ஷரபோவா விளக்கம் அளித்து இருந்தார்.

மெல்டோனியம் என்பது நீரிழிவு மற்றும் குறை மெக்னீசியம் ஆகிய சிகிச்சைகளுக்கு பயன்படும் மருந்தாகும். கடந்த ஜனவரி 1-ம் தேதி உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் மெல்டோனியத்தை தடை செய்தது கவனிக்கத்தக்கது.

Similar News