செய்திகள் (Tamil News)

42 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

Published On 2016-09-17 05:40 GMT   |   Update On 2016-09-17 05:40 GMT
42 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடங்கப்படுகிறது
சென்னை:

மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான 14-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி எழும்பூர் கெங்கு தெருவில் உள்ள மாநகராட்சி திடலில் இன்று (17-ந் தேதி) தொடங்குகிறது. வருகிற 25-ந் தேதி வரை 9 நாட்கள் இந்தப் போட்டி நடக்கிறது.

இதன் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., ஐ.சி.எப்., ஸ்டேட் பாங்க், துறைமுக கழகம், சுங்க இலாகா, சத்யபாமா உள்பட 36 அணிகளும், பெண்கள் பிரிவில் ஜேப்பியர் இன்ஸ்ட்டிடியூட் உள்பட 6 அணிகளும் பங்கேற்கின்றன.

ஆண்கள் பிரிவு நாக் அவுட் முறையிலும், பெண்கள் பிரிவு ‘லீக்’ முறையிலும் மின்னொளியில் நடைபெறுகிறது.

ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.25 ஆயிரமும், 2-வது இடத்துக்கு ரூ.15 ஆயிரமும், பெண்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.15 ஆயிரமும், ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

இன்று மாலை இந்தப் போட்டியை மலேசியா எஸ்.பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபால கிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கனகசுந்தரம்,பொருளாளர் எம்.எம்.டி.ஏ.கோபி, எஸ்.எஸ்.குமார் ஆகியோர் செயது வருகிறார்கள்.

Similar News