செய்திகள்
டி20 போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்து அசத்திய கேப்டன் கூல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, டி20 கிரிக்கெட் போட்டிகளில் 6000 ரன்கள் கடந்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். #ChennaiSuperKings #MSDhoni #IPL2018 #VIVOIPL
புதுடெல்லி:
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 11-வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற 52வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 10 ரன்கள் எடுத்த போது, டி20 கிரிக்கெட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 6000 ரன்களை கடந்த ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை டோனி பெற்றார்.
முன்னதாக சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோகித் சர்மா, கவுதம் காம்பிர் ஆகியோரும் 6000 ரன்களை கடந்துள்ளனர். #ChennaiSuperKings #MSDhoni #IPL2018 #VIVOIPL