இந்தியா

டெல்லியில் 3 இடங்களில் துப்பாக்கி சூடு- ஜாமீனில் வந்த ரவுடி சுட்டுக்கொலை

Published On 2024-11-10 06:19 GMT   |   Update On 2024-11-10 06:19 GMT
  • ரவுடி கும்பலுக்கு இடையேயான மோதலில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
  • அடுத்தடுத்து நடைபெற்ற 3 துப்பாக்கி சூடு சம்பவங்கள் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

டெல்லி:

டெல்லியில் முண்ட்கா பகுதியை சேர்ந்தவர் அமித்லக்ரா (வயது 22). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் ஜாமீனில் வந்த இவர் நேற்றிரவு வீட்டருகே நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அமித்லக்ரா மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், ரவுடி கும்பலுக்கு இடையேயான மோதலில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

அமித்லக்ரா அப்பகுதியை சேர்ந்த கோகி கும்பலில் ஒருவராக இருந்துள்ளார். இந்த கும்பலுக்கும், தில்லு தாஜ்பூரியா கும்பலை சேர்ந்தவர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வந்ததும், இந்த விரோதத்தில் தில்லு தாஜ்பூரியா கும்பலை சேர்ந்தவர்கள் நேற்று அமித்லக்ராவை சுட்டுக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கொலையாளிகளை அடையாளம் காண, கொலை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே வடகிழக்கு பகுதியில் 2 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. அங்குள்ள வெல்கம் பகுதியில் கபீர் நகரில் மொபட்டில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு விட்டு அவரது மொபட்டை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் நதீம் என்ற பாபி மற்றும் ஷான வாஸ் என்ற 2 பேர் காயம் அடைந்தனர். இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் நதீம் இறந்து விட்டார். ஷானவாசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே ஜோதி நகரிலும் ஒரு வீட்டில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த 2 துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து நடைபெற்ற 3 துப்பாக்கி சூடு சம்பவங்கள் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Tags:    

Similar News