கூகுளில் கார் ரெண்டல் தேடிய நபர்.. போலி இணையதளத்தால் ரூ.4.1 லட்சத்தை இழந்த சோகம்
- பாதிக்கப்பட்ட நபர் கார் ரெண்டல் இணையதளங்களை கூகுளில் தேடியுள்ளார்.
- சக்தி கார் ரெண்டல் இணையதளத்தின் தொலைபேசி எண்ணிற்கு அவர் அழைத்துள்ளார்.
கர்நாடகாவில் போலியான கார் புக்கிங் இணையதளத்தில் கார் புக் செய்த நபர் தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 4.1 லட்சத்தை இழந்துள்ளார்.
மேற்குவங்கத்தை சேர்ந்த நபர் ஒருவர் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள கார் ரெண்டல் இணையதளங்களை கூகுளில் தேடியுள்ளார். அப்போது அவரின் கண்ணில் தென்பட்ட சக்தி கார் ரெண்டல் இணையதளத்தின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்துள்ளார்.
அப்போது அவரிடம் பேசிய நபர், எங்கள் இணையதளத்தில் 150 ரூபாய் செலுத்தி காரை புக்கிங் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அவரும் தனது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை உபயோகித்து பணம் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் அவரால் பணம் செலுத்தமுடியவில்லை. அப்போது தான் அவரது வங்கிக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கான பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவருக்கு வங்கியில் இருந்து மெசேஜ் வந்துள்ளது.
எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டில் இருந்து ரூ. 3.3 லட்சமும் கனரா வங்கி டெபிட் கார்டில் இருந்து 80,056 ரூபாயும் என மொத்தமாக 4.1 லட்சம் ரூபாயை அவர் இழந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள உடுப்பி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.