செய்திகள் (Tamil News)

சதத்தை தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன் : பிரித்வி ஷா

Published On 2018-10-04 19:53 GMT   |   Update On 2018-10-04 19:53 GMT
சதத்தை எட்டியதும் எனது நினைவுக்கு முதலில் வந்தவர் எனது தந்தை தான். அவருக்கு இந்த சதத்தை அர்ப்பணிக்கிறேன் என பிரித்வி ஷா கூறினார். #PrithviShaw #INDvsWI #DedicateFather
மும்பையில் இருந்து உருவாகும் அடுத்த சச்சின்’ என்று பிரித்வி ஷாவை இப்போதே ரசிகர்கள் சொல்லத் தொடங்கி விட்டனர். சதம் அடித்த பிறகு பிரித்வி ஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்கிலாந்து தொடருக்கே நான் களம் காண தயாராக இருந்தேன். ஆனால் வாய்ப்பு இப்போது தான் கிடைத்திருக்கிறது. முதல்முறையாக சர்வதேச போட்டியில் ஆடியதால் தொடக்கத்தில் கொஞ்சம் பதற்றத்திற்கு உள்ளானேன். ஆனால் 10-15 ஓவர்களுக்கு பிறகு இயல்பாக விளையாடத் தொடங்கினேன். கணிசமான பவுண்டரிகளும் அடித்தேன். முடிந்த வரை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டேன். இந்த சதம் எனக்கு போதுமானது அல்ல. ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்டது. இன்னும் கூடுதல் நேரம் பேட்டிங் செய்திருக்க வேண்டும். தேனீர் இடைவேளைக்கு 10 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் ஆட்டம் இழந்தது ஏமாற்றம் அளிக்கிறது.



சதத்தை எட்டியதும் எனது நினைவுக்கு முதலில் வந்தவர் எனது தந்தை தான். எனக்காக அவர் நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார். இன்னும் செய்து கொண்டிருக்கிறார். எனக்கு எல்லா வகையிலும் அவர் பக்கபலமாக இருக்கிறார். அவருக்கு இந்த சதத்தை அர்ப்பணிக்கிறேன்.

மூத்த வீரர்களின் அனுபவத்தை ஓய்வறையில் பகிர்ந்து கொள்வது சிறப்பான விஷயமாகும். புதுமுக வீரரான நான், ஓய்வறையில் சவுகரியமாக இருக்கும் வகையில் சீனியர் வீரர்கள் என்னை வழிநடத்துகிறார்கள். கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும், ‘சீனியர்-ஜூனியர் பாகுபாடு இங்கு கிடையாது. நீ இந்திய அணிக்காக ஆடுகிறாய் என்றால் மற்றவர்களும் இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள்’ என்று எப்போதும் சொல்வார்கள். அவர்கள் எனக்கு நம்பிக்கை அளித்ததோடு, நெருக்கடி இல்லாமலும் பார்த்துக் கொண்டனர். இப்போது எல்லா வீரர்களும் எனக்கு நண்பர்கள் ஆகி விட்டனர்.

இவ்வாறு பிரித்வி ஷா கூறினார்.

தனது 4-வது வயதிலேயே பிரித்வி ஷா தாயை இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News