விளையாட்டு (Sports)
சச்சின் தெண்டுல்கர் - விராட் கோலி

கண்ணீரை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கோலியின் பரிசு விலைமதிப்பற்றது - நினைவுகூர்ந்த சச்சின்

Published On 2022-02-18 05:40 GMT   |   Update On 2022-02-18 05:40 GMT
தெண்டுல்கர் 23 ஆண்டுகளாக தேசத்தின் பாரத்தை சுமந்துள்ளார். நாங்கள் அவரை தோளில் சுமக்கும் நேரம் இது என்று விராட் கோலி குறிப்பிட்டு இருந்தார்.
மும்பை:

கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் 2013-ம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் அவர் தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தெண்டுல்கர் கூறியதாவது:-

நான் ஓய்வுபெற்ற அன்று எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் வீரர்களுக்கான அறைக்கு திரும்பியுடன் கண்ணீருடன் இருந்தேன். இனி இந்தியாவுக்காக சர்வதேச போட்டியில் களம் இறங்க முடியாது என்று ஒரு ஓரத்தில் தனியாக தலையில் டவலுடன் அமர்ந்து கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தேன்.

உண்மையிலேயே உணர்ச்சிவசப்பட்டு என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த நேரத்தில் விராட் கோலி என்னிடம் வந்தார். அவர் தனது தந்தை கொடுத்த புனித கயிறு ஒன்றை என்னிடம் கொடுத்தார். அவர் கொடுத்த பரிசு விலை மதிப்பற்றது.

இவ்வாறு தெண்டுல்கர் தனது நினைவுகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

2011-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை கைப்பற்றியது. அப்போது முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய தெண்டுல்கருக்காக அவரை தோளில் சுமந்து மைதானம் முழுவதும் வலம் வந்தனர். விராட் கோலியும் அவரை தோளில் சுமந்து சென்றார்.



அப்போது கோலி கூறும்போது, ‘தெண்டுல்கர் 23 ஆண்டுகளாக தேசத்தின் பாரத்தை சுமந்துள்ளார். நாங்கள் அவரை தோளில் சுமக்கும் நேரம் இது’என்று குறிப்பிட்டு இருந்தார்.

Similar News