3வது போட்டியில் வெற்றி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை
- முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 162 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
தம்புல்லா:
இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் பவல் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மோதி 15 பந்தில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இலங்கை அணி சார்பில் தீக்ஷனா, ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 39 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ், குசால் பெராரா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர்.
இறுதியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 166 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. குசால் மெண்டிஸ் 68 ரன்னும், குசால் பெராரா 55 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.