ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா 2-வது வெற்றி பெறுமா? ஜப்பானுடன் இன்று மோதல்
- 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி வெற்றியுடன் இந்தியா கணக்கை தொடங்கியது.
- இந்தியாவின் அதிரடி வெற்றியால் போட்டியை காண வந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
சென்னை:
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.
தொடக்க நாளான நேற்று மூன்று ஆட்டங்கள் நடந்தது. தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், மலேசியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன. இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதின.
இதில் இந்திய அணி கோல் மழை பொழிந்தது. 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி வெற்றியுடன் இந்தியா கணக்கை தொடங்கியது. இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், வருண்குமார் தலா இரண்டு கோலும், சுக்ஜீத் சிங், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்தியாவின் அதிரடி வெற்றியால் போட்டியை காண வந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இன்றும் மூன்று லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளும், 6.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மலேசியா-சீனா அணிகளும் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இந்தியா, ஜப்பானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் இந்தியா ஆதிக்கம் தொடர்ந்து 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டத்தில் அதிரடி வெற்றியை ருசித்துள்ள இந்தியா, நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
ஜப்பான், தனது தொடக்க ஆட்டத்தில் தோற்றதால் (தென்கொரியாவிடம்) வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களம் இறங்குகிறது.