விளையாட்டு (Sports)

சென்னை- ராஜஸ்தான் மோதல்: சேப்பாக்கத்தில் ரசிகர்கள் குவிந்தனர்

Published On 2024-05-12 07:15 GMT   |   Update On 2024-05-12 07:15 GMT
  • சென்னை சூப்பர் கிங்ஸ் 7-வது வெற்றியை பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
  • ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 61-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

சி.எஸ்.கே. 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்ப்பில் நீடிக்க வேண்டுமானால் ராஜஸ்தானை கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். அந்த அணியை தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி சி.எஸ்.கே.வை வென்று 9-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் வேட்கையில் உள்ளது. நெருக்கடி எதுவும் இல்லாமல் ராஜஸ்தான் விளையாடும்.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டம் இதுவாகும். இதுவரை நடந்த 6 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-ல் (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட் , ஐதராபாத் 78 ரன்) வெற்றி பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது.

அதாவது சேப்பாக்கத்தில் முதலில் பேட்டிங் செய்து 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 2 போட்டியில் தோற்றது. 2-வது பேட்டிங் செய்து இரண்டில் வெற்றி பெற்றது.

ஐதராபாத்துடன் மோதிய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் இன்றைய போட்டியில் உபயோகிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை 78 ரன்னில் வெற்றிபெற்றது. ஆனால் அந்த போட்டி இரவில் நடந்தது. ஆனால் இன்றைய ஆட்டம் பகல்-இரவாக நடக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்காக இன்று காலையில் இருந்ததே சேப்பாக்கம் மைதானத்துக்கு குவிய தொடங்கினார்கள். ரசிகர்கள், ரசிகைகள் காலை 11.30 மணியளவில் இருந்து ஸ்டேடியத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

டிக்கெட் வைத்திருந்த அவர்கள் எந்த கேட் வழியாக எந்த கேலரிக்கு செல்ல வேண்டும் என்பதை போலீசாரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அலுவலர்களும் அறிவுறுத்துகிறார்கள். நேரம் செல்ல செலல ரசிகர்கள் ஸ்டேடியம் முன்பு பெரும் அளவில் திரண்டனர்.

போட்டியை காண வந்த ரசிகர்கள் டோனியின் நம்பரான 7 ஐ கொண்ட ஜெர்சியை ஆர்வத்துடன் வாங்கினார்கள். இதனால் ஸ்டேடியம் பகுதியிலும், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோட்டில் ஜெர்சி விற்பனை அமோகமாக இருந்தது.

மேலும் ரசிகர்கள் தங்களது முகங்களில் சி.எஸ்.கே. மற்றும் டோனி என்ற எழுத்துக்களை பெயிண்டால் எழுதி கொண்டனர். வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் ரசிகர்கள் போட்டியை பார்க்க சென்றனர்.

ஐ.பி.எல். போட்டியையொட்டி சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மைதானத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் போட்டி தொடங்கும் நேரத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News