கருணரத்னே, சண்டிமால் அரை சதம்: மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 237/4
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்கள் எடுத்தது.
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 340 ரன்கள் எடுத்தது.
கொழும்பு:
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடி சதமடித்த கமிந்து மெண்டிஸ் 114 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 50 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.
நியூசிலாந்து சார்பில் வில்லியம் ரூர்கே 5 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ், அஜாஸ் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து, ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 340 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 70 ரன்னும், டேரில் மிட்செல் 57 ரன்னும், கேன் வில்லியம்சன் 55 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 39 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய கிளென் பிலிப்ஸ் 49 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் நியூசிலாந்து 35 ரன்கள் முன்னிலை பெற்றது.
இலங்கை அணி சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டும், ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டும், தனஞ்செய டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 2 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு இணைந்த திமுத் கருணரத்னே, தினேஷ் சண்டிமால் ஜோடி 147 ரன்கள் சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர்.
கருணரத்னே 83 ரன்னிலும், சண்டிமால் 61 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கமிந்து மெண்டிஸ் 13 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செய டி சில்வா தலா 34 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.