டாம் லாதம், வில்லியம்சன் அரைசதம்: இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து 255/4
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்கள் எடுத்தது.
- கமிந்து மெண்டிஸ் சதமும், குசால் மெண்டிஸ் அரை சதமும் கடந்தனர்.
கொழும்பு:
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடி சதமடித்த கமிந்து மெண்டிஸ் 114 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 50 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.
நியூசிலாந்து சார்பில் வில்லியம் ரூர்கே 5 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ், அஜாஸ் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன டேவன் கான்வே 17 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டகாரர் ஆன டாம் லதாம் அரை சதம் கடந்து 70 ரன்னில் வெளியேறினார். கேன் வில்லியம்சன் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 39 ரன் எடுத்தார்.
இதனையடுத்து கை கோர்த்த டேரில் மிட்செல் மற்றும் டான் பிளண்டெல் சிறப்பாக விளையாடி, 2-வது நாளில் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 41 ரன்னும், டாம் பிளண்டெல் 18 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். நியூசிலாந்து இன்னும் 50 ரன்கள் பின்தங்கி உள்ளது.