கிரிக்கெட் (Cricket)

147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை- கமிந்து மெண்டிஸ் மிரட்டல் சாதனை

Published On 2024-09-27 02:16 GMT   |   Update On 2024-09-27 02:16 GMT
  • நியூசிலாந்து எதிரான நேற்றைய ஆட்டத்தில் கமிந்து மெண்டிஸ் அரை சதம் விளாசினார்.
  • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 306 ரன்கள் குவித்தது.

காலே:

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா ஒரு ரன்னில் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னேவும், விக்கெட் கீப்பர் தினேஷ் சன்டிமாலும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். கருணாரத்னே 46 ரன்களில், ரன்-அவுட் ஆனார். மறுமுனையில் நிதானமாக ஆடிய சன்டிமால் தனது 16-வது சதத்தை நிறைவு செய்தார். இந்த மைதானத்தில் அவரது 6-வது சதமாகும். சன்டிமால் 116 ரன்கள் (208 பந்து, 15 பவுண்டரி) எடுத்த நிலையில் போல்டு ஆனார். இதன் பின்னர் மேத்யூஸ், காமிந்து மென்டிஸ் கூட்டணி அமைத்து வலுவான நிலையை நோக்கி பயணிக்க வைத்தனர்.

ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 306 ரன்கள் சேர்த்துள்ளது. மேத்யூஸ் 78 ரன்களுடனும், காமிந்து மென்டிஸ் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணி தரப்பில் 5-வது விக்கெட்டிற்கு களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்து அசத்திய கமிந்து மெண்டிஸ் புதிய வரலாறு படைத்துள்ளார்.

அதன்படி இலங்கை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக உருவெடுத்துள்ள கமிந்து மெண்டிஸின் 8-வது 50 பிளஸ் ஸ்கோர் இதுவாகும். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டிக்கு பிறகு தொடர்ச்சியாக 8 போட்டிகளில் அரைசதங்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையை கமிந்து மெண்டிஸ் படைத்துள்ளார். அதன்படி இலங்கை அணிக்காக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்கள், 4 சதங்களை கமிந்து மெண்டிஸ் விளாசி அசத்தியுள்ளார்.

முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான டான் பிராட்மேன் மற்றும் சுனில் கவாஸ்கர் கூட இப்படி ஒரு சாதனையை படைத்ததில்லை.

தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் 50+ ஸ்கோர்கள் அடித்த வீரர்கள்:

8 - கமிந்து மெண்டிஸ்*

7 - சௌத் ஷகீல்

6 - பர்ட் சட்க்ளிஃப்

6 - சயீத் அகமது

6 - சுனில் கவாஸ்கர்

Tags:    

Similar News