கிரிக்கெட்

வங்கதேச டெஸ்ட் தொடர்- வார்னே உள்பட பலரின் சாதனையை முறியடிக்க அஸ்வினுக்கு வாய்ப்பு..

Published On 2024-09-16 05:37 GMT   |   Update On 2024-09-16 05:37 GMT
  • 2 விக்கெட்டுகள் வீழ்த்தினால் பேட் கம்மின்ஸ் சாதனையை அஸ்வின் முறியடிப்பார்.
  • 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வால்ஷ் சாதனையை முறியடிப்பார்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் அனைவரும் ஏற்கனவே சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொடரில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பல சாதனைகளை படைவிருக்கிறார். இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் முதலிடத்தில் உள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் இதுவரை 43 போட்டியில் விளையாடியுள்ள அவர் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 175 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தற்போது 174 விக்கெட்டுடன் மூன்றாவது இடத்தில் அஸ்வின் இருக்கிறார். 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் கம்மின்சை பின்னுதள்ளி விடுவார்.

மேலும் 14 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் நாதன் லயனை பின்னுக்கு தள்ளி அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பார். அதோடு மட்டுமின்றி அடுத்தடுத்து நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியில் அவர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் பவுலராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தும் வாய்ப்புள்ளது.

இந்தியாவில் 126 சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தம் 455 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். அவர் வங்கதேச தொடரை 22 விக்கெட்டுகளுடன் முடித்தால், இந்திய மண்ணில் விளையாடிய போட்டிகளில் 476 சர்வதேச விக்கெட்டுகள் என்ற அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பார்.

இதை தவிர, 4 மற்றும் 15 விக்கெட்டுகள் வீழ்த்தினால், டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் கர்ட்னி வால்ஷ் (519), ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் (530) ஆகியோரை பின்னுக்குத் தள்ளுவார். மேலும் இரண்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஷேன் வார்னேவின் (37 முறை) 5 விக்கெட்டுகள் சாதனையை முறியடிப்பார். 5 விக்கெட்டுகள் அதிக முறை எடுத்தவர்கள் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (67) முதல் இடத்தில் உள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2023-25-ல் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் 51 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்த தொடரில் அஸ்வின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினால் WTC-l அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை அஸ்வின் பெறுவார்.

Tags:    

Similar News