என்னப்பா ஷாட் அது? நெட்டிசன்களை புலம்ப செய்த கே.எல். ராகுல்- வைரல் வீடியோ
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
- இந்தியா ஏ அணி 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான இரண்டாவது அன்-அஃபிஷியல் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று (நவம்பர் 7) துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதனால் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா ஏ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய அபிமன்யூ ஈஸ்வரன் ரன் ஏதும் எடுக்காமலும், கே.எல். ராகுல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அடுத்து வந்த சாய் சுதர்சனும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
அடுத்து வந்தவர்களில் தேவ்தத் படிக்கல் 26 ரன்களும், துருவ் ஜூரெல் 80 ரன்களும் அடித்ததால் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா ஏ சார்பில் சிறப்பாக பந்துவீசிய மைக்கல் நாசர் 4 விக்கெட்டுகளையும், வெப்ஸ்டர் 3 விக்கெட்டுகளையும், ஸ்காட் போலண்ட் மற்றும் கோரெ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஏ அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால், இந்தியா ஏ அணி 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்தியா ஏ அணி தடுமாற அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்த இன்னிங்ஸில் கே.எல். ராகுல் அவுட் ஆன விதம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. கேரெ வீசிய ஓவரை எதிர்கொண்ட கே.எல். ராகுல் குறிப்பிட்ட பந்தை விளையாட மனமின்றி அதனை தவிர்க்க ஸ்டம்ப்களை விட்டு நகர ஆயத்தமானார். அப்போது பந்தின் திசை மாறியது. இதனால் பந்து ஸ்டம்ப்களை கடந்து சென்றுவிடும் என்று கே.எல். ராகுல் எதிர்பார்த்தார்.
ஆனால், பந்து அவரின் கால்களுக்கு இடையில் கடந்து சென்று ஸ்டம்ப்களை தகர்க்க கே.எல். ராகுல் களத்தில் இருந்து வெளியேறினார். கே.எல். ராகுல் அவுட் ஆன விதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.