இந்தியாவுக்கு எதிரான தொடர்: பேட்டிங் வரிசையில் மாற்றமா? ஆஸ்திரேலிய பயிற்சியாளர் விளக்கம்
- இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- ஸ்டீவன் சுமித் தொடக்க ஆட்டக்காரராக தொடர்வாரா? என்பது குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம்.
சவுத்தம்டன்:
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் பெர்த்தில் நவ. 22-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த டேவிட் வார்னர், இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். அவரது ஓய்வுக்கு பிறகு ஸ்டீவன் சுமித் அந்த இடத்தில் விளையாடி வருகிறார்.
ஆனால் சுமித்தால் ஒரு தொடக்க ஆட்டக்காரராக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் அவர் மீண்டும் நடுவரிசைக்கு மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறுகையில், 'ஸ்டீவன் சுமித் தொடக்க ஆட்டக்காரராக தொடர்வாரா? என்பது குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் தீர்க்கமான எந்த முடிவுக்கும் வரவில்லை. இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்து நாங்கள் சிட்னியில் ஆலோசித்தோம். அதில் எங்களது பந்துவீச்சின் ஆழம் குறித்து பேசி இருந்தோம்.
சுமித்தை பின்வரிசைக்கு மாற்றினால், மற்ற வீரர்களில் யாராவது ஒருவர் மேல் வரிசையில் விளையாட வைக்க வேண்டும். அதேநேரத்தில் சுமித் விளையாடி வந்த பேட்டிங்கில் 4-வது வரிசையில் தற்போது கேமரூன் கிரீன் நன்றாக ஆடுகிறார். எனவே இந்த விஷயத்தில் இப்போதைக்கு உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.
நாங்கள் எங்களது டாப்-6 முன்னணி பேட்ஸ்மேன்கள் (சுமித், கவாஜா, டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன்) மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர்கள் நியூசிலாந்தை தொடரை சிறப்பாக முடித்தார்கள். அதனால் அவர்களில் எந்த மாற்றமும் இருக்காது' என்றார்.