கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்

Published On 2024-08-25 09:56 GMT   |   Update On 2024-08-25 09:56 GMT
  • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களைக் குவித்தது.
  • பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ராவல்பிண்டி:

பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார். சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார்.

வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து அடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்னில் அவுட்டானார். ஷட்மன் இஸ்லாம் 93 ரன்னிலும், மெஹிதி ஹசன் 77 ரன்னிலும், லிட்டன் தாஸ் 56 ரன்னிலும், மொமினுல் ஹக் 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத், முகமது அலிம் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

117 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. வங்கதேச வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது ரிஸ்வான் 51 ரன் எடுத்தார்.

வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி எளிதில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Tags:    

Similar News