கிரிக்கெட் (Cricket)

2-வது டெஸ்ட்: ரபாடா அசத்தல்.. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 159 ரன்னில் ஆல் அவுட்

Published On 2024-10-31 07:34 GMT   |   Update On 2024-10-31 07:34 GMT
  • வங்கதேச அணி 416 ரன்கள் பின் தங்கி உள்ளது.
  • ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சட்டோகிராம்:

தென்ஆப்பிரிக்கா- வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. டிரிஸ்டான் ஸ்டப்ஸ் சதம் (106 ரன்) அடித்தார். தொடக்க ஆட்டக்காரர் டோனி சி ஜோர்சி 141 ரன்களுடனும், டேவிட் பெடிங்காம் 18 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். டேவிட் பெடிங்காம் 59 ரன்னிலும், நிலைத்து நின்று ஆடிய டோனி டி ஜோர்சி 177 ரன்னிலும் (269 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) தைஜூல் இஸ்லாம் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதை தொடர்ந்து வந்த வியான் முல்டெர் அவரது முதலாவது சதத்தை எட்டினார். அத்துடன் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 144.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 575 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 9 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 6 ரன்னுடனும், கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஷன்டோ 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹீம் 0, மெஹிதி ஹசன் மிராஸ் 1, மஹிதுல் இஸ்லாம் அன்கான் 0, என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 48 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதனையடுத்து மொமினுல் ஹக் - தைஜுல் இஸ்லாம் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் அரை சதம் அடித்து அசத்தினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் 86 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தது. அடுத்த சிறிது நேரத்தில் இஸ்லாம் 30 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் வங்கதேசம் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்கதேச அணி 416 ரன்கள் பின் தங்கி உள்ளது. 

Tags:    

Similar News