சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது.. பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தகவல்
- பாகிஸ்தான் செல்லுமா என்பது கேள்வி குறியாகவே இருந்து வந்தது.
- அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் நடைபெறாமல் இருந்தது.
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த தொடருக்காக இந்தியா அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது கேள்வி குறியாகவே இருந்து வந்தது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008 கடைசியாக பாகிஸ்தானில் விளையாடியது. 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இரு அணிகளுக்கு இடையிலான நேரடி தொடர் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் நடைபெறாமல் இருந்தது.
ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடுவதற்காக ஹைப்ரிட் முறை பின்பற்றப்பட இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது.
இது குறித்து பி.சி.சி.ஐ. வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் கூறும் போது, "இது தான் எங்கள் முடிவு, அதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் எங்களது அனைத்து போட்டிகளையும் துபாய்க்கு மாற்ற அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்," என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறும் என்றும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.