கிரிக்கெட் (Cricket)

பெண்கள் பிரீமியர் லீக்: மந்தனா, ஹர்மன் உள்பட 71 வீராங்கனைகள் தக்கவைப்பு

Published On 2024-11-08 06:47 GMT   |   Update On 2024-11-08 06:47 GMT
  • ஒரு அணி ரூ.15 கோடி வரை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • அதிகபட்சமாக குஜராத் ஜெயன்ட்ஸ் அணியிடம் ரூ.4.4 கோடி இருப்புத்தொகை உள்ளது.

புதுடெல்லி:

ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் 3-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீராங்கனைகளின் விவரத்தை நேற்று வெளியிட்டது.

நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ரிச்சா கோஷ், சோபி டிவைன், எலிஸ் பெர்ரி உள்பட 13 வீராங்கனைகள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். டேனி வியாட் வர்த்தக பரிமாற்ற முறையில் உ.பி. வாரியர்ஸ் அணியில் இருந்து இழுக்கப்பட்டுள்ளார். ஹீதர் நைட் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், அமெலியா கெர், ஹெய்லி மேத்யூஸ், நாட் சிவெர் உள்பட 14 வீராங்கனைகள் நீடிக்கின்றனர். இசி வோங் உள்ளிட்ட 4 பேர் கழற்றி விடப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, அனபெல் சுதர்லேண்ட் உள்பட 14 வீராங்கனைகளை தக்கவைத்திருக்கிறது. பூனம் யாதவ் உள்ளிட்ட 4 பேரை வெளியேற்றியுள்ளது.

உ.பி. வாரியர்ஸ் அலிசா ஹீலி, சமாரி அட்டப்பட்டு, தீப்தி ஷர்மா உள்பட 15 பேரை தன்வசமாக்கி இருக்கிறது. 4 வீராங்கனைகளை கழற்றிவிட்டுள்ளது. குஜராத் ஜெயன்ட்ஸ் அணி பெத் மூனி, லாரா வோல்வார்ட், லிட்ச்பீல்டு உள்பட 14 வீராங்கனைகளை தக்கவைத்தது. சினே ராணா உள்பட 7 பேருக்கு கல்தா கொடுத்தது.

5 அணிகளும் மொத்தம் 71 வீராங்கனைகளை தக்கவைத்துள்ளன. விடுவிக்கப்பட்ட வீராங்கனைகள் ஏலத்திற்கு வருவார்கள். ஒரு அணி ரூ.15 கோடி வரை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது. தக்க வைத்துள்ள வீராங்கனைகளுக்கான ஊதியம் போக மீதமுள்ள தொகை வைத்து அணிக்கு தேவையான எஞ்சிய வீராங்கனைகளை எடுக்கலாம். அதிகபட்சமாக குஜராத் ஜெயன்ட்ஸ் அணியிடம் ரூ.4.4 கோடி இருப்புத்தொகை உள்ளது.

Tags:    

Similar News