கிரிக்கெட் (Cricket)

2-வது இன்னிங்சிலும் ஜூரெல் அரைசதம்: 229 ரன்னில் ஆல்அவுட் ஆன இந்தியா 'ஏ'

Published On 2024-11-09 04:49 GMT   |   Update On 2024-11-09 04:49 GMT
  • முதல் இன்னிங்சில் ஜூரெல் 80 ரன்கள் அடித்தார்.
  • 2-வது இன்னிங்சில் 68 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா- இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே முடிவடைந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் 2-வது போட்டி கடந்த 7-ந்தேதி மெல்போர்னில் தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 'ஏ' பந்து வீச்சை தேர்தவு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 'ஏ' 161 ரன்னில் சுருண்டது, அபிமன்யூ ஈஸ்வரன், சாய் சுதர்சன் ஆகியோர் டக்அவுட் ஆகினர். கே.எல். ராகுல் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தலா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பரான துருவ் ஜுரெல் தாக்குப்பிடித்து அதிகபட்சமாக 80 ரன்கள் அடித்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 'ஏ' 223 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பிரசித் 4 விக்கெட்டும், முகேஷ் குமார் 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 62 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 'ஏ' அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜுரேல் 19 ரன்களுடனும், நிதிஷ் குமார் ரெட்டி 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நிதிஷ் குமார் ரெட்டி 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தனுஷ் கோட்டியன் 44 ரன்கள் அடித்தார். மறுமுனையில் துருவ் ஜுரேல் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்தியா 'ஏ' 2-வது இன்னிங்சில் 229 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இதனால் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா 'ஏ'. தற்போது ஆஸ்திரேலியா 'ஏ' 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Tags:    

Similar News