சஜித் கான் அசத்தல் பந்துவீச்சு: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்
- டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 267 ரன்களில் ஆல் அவுட்டானது.
- பாகிஸ்தான் சார்பில் சஜீத் கான் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ராவல்பிண்டி:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து சாதனை படைத்ததுடன் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்டில் சுழல் ஜாலத்தால் மிரட்டிய பாகிஸ்தான் 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரை 1-1 என சமனில் கொண்டு வந்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் திணறினர்.
பென் டக்கெட் 52 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஜேமி சுமித் 89 ரன்கள் எடுத்தார். கஸ் அட்கின்சன் 39 ரன்கள் அடித்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 6 விக்கெட்டும், நோமன் அலி 3 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்துள்ளது.