முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனுஷ்மான் மரணம் - பிரதமர் மோடி, ஜெய் ஷா இரங்கல்
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அனுஷ்மான் கெய்க்வாட் சிகிச்சை பெற்று வந்தார்.
- கபில் தேவ் தன்னுடைய பென்சன் தொகையை அனுஷ்மான் சிகிச்சைக்கு கொடுத்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவருடைய இழப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், "அனுஷ்மான் கெய்க்வாட் கிரிக்கெட்டுக்கான அவரது பங்களிப்பிற்காக நினைவுகூரப்படுவார். அவர் ஒரு திறமையான வீரர் மற்றும் ஒரு சிறந்த பயிற்சியாளர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார் .
அனுஷ்மான் உயிரிழந்ததற்கு பிசிசிஐ செயலாளர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், "அனுஷ்மான் கெய்க்வாட்டின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" ஏன்னு பதிவிட்டுள்ளார்.
பிசிசிஐ முன்னாள் செயலாளரான சவுரங் கங்குலியும் அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக 12 வருடங்களில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுஷ்மான், 1990-களின் இறுதியில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்..
அவருடைய வழி காட்டுதலில் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா கோப்பையை இந்தியா வென்றதை மறக்க முடியாது. அத்துடன் ஓய்வுக்கு பின் பிசிசிஐ நிர்வாகத்தில் அவர் முக்கிய பொறுப்பிலும் இருந்தார்.
71 வயதாகும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தார். எனவே தமக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்யுமாறு அவருடைய சார்பில் பிசிசிஐ-க்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பிசிசிஐ எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனையடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை தனது நண்பன் மற்றும் சக வீரரான அனுஷ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார். அத்துடன் மற்ற வீரர்களும் அவர்களுடைய குடும்பம் சம்மதித்தால் தங்களது பென்சன் தொகையை அவருடைய மருத்துவ உதவிக்கு கொடுக்கலாம் என கபில் தேவ் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு பிசிசிஐ 1 கோடி நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.