4 ஓவர்களில் 93 ரன்கள்.. டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை வழங்கிய பவுலர்
- அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
- ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக பல அணிகள் குவாலிபையர் சுற்றில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. அதில் ஜிம்பாப்வே, கென்யா, ருவாண்டா, காம்பியா, மொசாம்பிக், சீஷெல்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்குள் மோதுகின்றன.
இதில் நேற்று நடந்த போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்களை விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக மாறியது.
ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ராசா அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 133 ரன்களை விளாசினார். இதில் 15 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இவரைத் தொடர்ந்து வந்த ரியான் பர்ல் 25 ரன்களும், மடான்டே 53 ரன்களையும் விளாசினர்.
காம்பியா தரப்பில் மொத்தம் ஆறு வீரர்கள் பந்துவீசினர். இதில் ஒரே ஓவர் வீசிய இஸ்மாலியா டாம்பா 24 ரன்களை விட்டுக்கொடுத்தார். அர்ஜூன் சிங் மூன்று ஓவர்களை வீசி 51 ரன்களை விட்டுக்கொடுத்தார். இவர் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் நான்கு ஓவர்களை வீசினர். இதில் அனைவரும் குறைந்தபட்சம் 50 ரன்களை விட்டுக் கொடுத்தனர்.
இதில் முசா ஜார்படெ 4 ஓவர்களில் 93 ரன்களை விட்டுக்கொடுத்தார். இது டி20 கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்கள் எனும் மோசமான சாதனையாக அமைந்தது. முன்னதாக இலங்கை அணியின் கசுன் ரஜிதா 4 ஓவர்களில் 75 ரன்களை விட்டுக்கொடுத்தது அதிகபட்ச ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.