கிரிக்கெட்

138 ரன்னில் சுருண்ட இந்தியா: 27 ஆண்டுக்கு பிறகு தொடரை வென்ற இலங்கை

Published On 2024-08-07 15:01 GMT   |   Update On 2024-08-07 15:01 GMT
  • இந்திய அணி 138 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
  • இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இதனையடுத்து நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பெர்னாண்டோ 96 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - சுப்மன் கில் களமிறங்கினர். சுப்மன் கில் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்கதில் இருந்தே அதிரடியாக விளையாடிய ரோகித் 20 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

விராட் கோலி 20, ரிஷப் பண்ட் 6, ஷ்ரேயாஸ் அய்யர் 8, அக்ஷர் படேல் 2, ரியான் பராக் 15, சிவம் துபே 9 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். குறிப்பாக விராட் கோலி அவுட் என தெரிந்தும் தேவையில்லாமல் ரிவ்யூ எடுத்தார். இவரை போன்று ஷ்ரேயாஸ் அய்யர் அவுட் என தெரிந்தும் ரிவ்யூ எடுத்து வெளியேறினர்.

இவர்களையெல்லாம் தவிர ரியான் பராக் அவுட் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்டெம்புக்கு வருகிற பந்தை பேட்டை தூக்கி வைத்து கொண்டு பந்தை விட்டுவிட்டார். இதனால் பந்து ஸ்டெம்பை தாக்கியது. பேட்டை வைத்து தட்டாமல் ஸ்டெம்புக்கு போகும் வரை பார்த்துக் கொண்டிருந்தது என்னடா பேட்டிங் பன்ற என்பது போல இருந்தது.

இதனால் இந்திய அணி 17.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து வாஷிங்டன் சுந்தர் - குல்தீப் யாதவ் ஜோடி பொறுப்புடன் ஆடினர். அதிரடியாக விளையாடிய சுந்தர் 25 பந்தில் 30 ரன்களுடன் வெளியேறினார்.

இதனால் இந்திய அணி 26.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களில் அடங்கியது. இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதனால் 27 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணிக்கு கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடைசியாக 1997-ம் ஆண்டு இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News