கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி... சர்பராஸ் கான் அபார சதம்

Published On 2024-10-19 04:46 GMT   |   Update On 2024-10-19 04:46 GMT
  • 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
  • இந்தியா 60 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சில் சிக்கி, 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.

தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர்.

366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோகித் சர்மா அரை சதம் அடித்து 52 ரன்னிலும் அவுட் ஆகினர்.

விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இதனை தொடர்ந்து, இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இதில் சர்பராஸ் கான் சதம் விளாசினார். காலை 10 மணி நிலவரப்படி சர்பரஸ் கான் 117 பந்துகளில் 106 ரன்களுடன் விளையாடி வருகிறார். அவருக்கு ஜோடியாக ரிஷப் பண்டும் விளையாடி வருகிறார். அவர் 19 பந்துகளில் 11 ரன்களை எடுத்துள்ளார்.

இந்தியா 60 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து விளையாடி வருகிறது. 

Tags:    

Similar News